தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கினர். இத்திருவிழா செப்டம்பர் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 8-ம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 9-ம் நாளான இன்று (அக்.1) அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மகிசா சூரசம்ஹாரம்: தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது. இதையொட்டி நாளை இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக எழுந்தருளி மகிசா சூரனை சம்ஹாரம் செய்வார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையிலும், 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலிலும், 5 மணிக்கு கோயில் கலையரங்கிலும் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். நாளை மகிசா சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.