பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்தபோது வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர். அப்போது தங்கள் ஆயுதங்களை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு வன்னி மரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்ததும், பின் ஆயுத பூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் 9 ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்டதால் இவ்விழாவுக்கு ஆயுத பூஜை என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
பரமேஸ்வரியை வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவர். 10 வயது சிறுமியை சாமுண்டி வேடத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும். வசந்தா, காம்போஜி ராகங்களில் பாடல்கள் பாடி, தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை ஆகியவற்றில் முடிந்ததை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
கலைகள் அனைத்துக்கும் அதிபதி சரஸ்வதிதேவி. சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். சரஸ்வதிதேவி முன்பு மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்கள், இசைக் கருவிகள், பேனா போன்றவற்றை வைத்து, அவளிடம் கல்வியை வரமாகக் கேட்க வேண்டும்.
தசமி திதியில் ஸ்தூல வடிவத்தில் இருக்கும் ஸ்ரீ அம்பிகையை (விஜயா) வழிபட வேண்டும். அன்றைய நாள் மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித் தந்து அருள்பாலிக்கும் சுபநாள். விஜயதசமியில் தொடங்கும் அனைத்து செயல்களும் வெற்றி பெறும். விஜயதசமி தினத்தில் ராமபிரான் ராவணனை அழித்தார் என்று கூறப்படுகிறது.