‘பவர் பாண்டி’ என்ற படத்தின் மூலம் தன்னை ஒரு திறன்மிகு இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்ட தனுஷ், அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற இரு படங்களை அடுத்தடுத்து இயக்கியிருந்தார். ஆனால், இந்த இரு படங்களுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து, தமிழில் எப்போதுமே மினிமம் வெற்றிக்கு உத்தரவாதம் தரும் ‘குடும்ப சென்டிமென்ட், கிராமத்துப் பின்னணி, தந்தையின் கனவை நிறைவேற்றும் மகன் என்ற கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் தனுஷ் அதில் வெற்றி பெற்றாரா என்று பார்க்கலாம்.
கிராமத்தில் சிறிய இட்லி கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவநேசன் (ராஜ்கிரண்). கேட்டரிங் படித்து முடிக்கும் அவரது மகன் முருகன் (தனுஷ்), வெளிநாட்டில் பெரும் பணக்காரரான விஷ்ணு வர்தனின் (சத்யராஜ்) ரெஸ்டாரன்ட்டில் வேலைக்கு சேர்கிறார். இங்கு அவரது திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன.
இது விஷ்ணுவர்தனின் மகன் அஸ்வினுக்கு (அருண் விஜய்)-க்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. முருகனின் மீது காதல் வயப்படும் தனது இளைய மகள் மீராவுக்கு (ஷாலினி பாண்டே) அவரை திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறார் விஷ்ணு வர்தன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். எனினும் ஒரு மரணத்தால் ஹீரோ எடுக்கும் முடிவு அஸ்வினுக்கு முருகனின் மீது பகையை ஏற்படுத்துகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘இட்லி கடை’ படத்தின் திரைக்கதை.
தமிழில் பல ஆண்டு காலமாக கையாளப்பட்ட மிக எளிமையான ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட தனுஷ், அதில் தனது டிரேட்மார்க் ஆன எமோஷனல் அம்சங்கள், கீழே இருக்கும் ஒருவன் மேலே ஏறி வருவது போன்றவற்றை கலந்து ஒரு குடும்ப சென்டிமென்ட் டிராமாவாக கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
முதல் பாதியில் வரும் தனுஷ், ராஜ்கிரண் இடையிலான காட்சிகளே படத்தின் பலம். இதுபோன்ற வேடங்களில் ராஜ்கிரணின் நடிப்பு குறித்து சொல்லவே வேண்டியதில்லை. அவர் வரும் காட்சிகள் உணர்வுபூர்வமாக ஆடியன்ஸ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படம் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே தேவையற்ற திணிப்புகள் இன்றி எதை நோக்கி படம் செல்கிறது என்பதை இயக்குநர் தனுஷ் உணர்த்தி விடுகிறார்.
முதல் பாதி தந்தை – மகன் சென்டிமென்ட், தனுஷின் வளர்ச்சி, சத்யராஜ் குடும்பத்துடனான தனுஷின் உறவு என இடைவேளை வரை தொய்வின்றியே செல்கிறது திரைக்கதை. எனினும், சத்யராஜ் குடும்பம் தொடர்பான காட்சிகளில் ஒருவித இயல்புத்தன்மை இல்லாத உணர்வு ஏற்படுகிறது. எமோஷனல் பாதையில் சென்று கொண்டிருக்கும் படம் இடைவேளைக்குப் பிறகு ஹீரோ – வில்லன் என்ற கோணத்துக்கு மாறும்போதுதான் படத்தின் பிரச்சினையும் தொடங்குகிறது.
இடைவேளைக்குப் பிறகு படத்தின் காட்சிகள் யூகிக்கக் கூடியதாக அமைந்ததே மிகப் பெரிய பலவீனம் என்று சொல்லலாம். முதல் பாதியில் ப்ளஸ் பாயின்டாக இருந்த எமோஷனல் காட்சிகள் கூட இரண்டாம் பாதியில் வலிந்து திணிக்கப்பட்டதாக உணரவைக்கிறது. குறிப்பாக அருண் விஜய்க்கும் தனுஷுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட்டுக்குள் சென்றுவிடுகின்றன.
நடிகராக தனுஷ் மேலும் ஒருபடி மெருகேறியிருக்கிறார். வெற்றியை நோக்கி ஓடும் இளைஞனின் மனப்பான்மையை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சத்யராஜ் குடும்பத்துடனான காட்சிகளில் கண்களிலேயே ஒருவித சங்கடத்தை வெளிப்படுத்தியிருப்பது பக்கா தனுஷ் மேனரிசம்.
தனக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். ஈகோ தலைக்கேறிய பணக்கார வீட்டுப் பிள்ளையாக அருண் விஜய் குறையில்லாத நடிப்பு. சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்திருக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறைவான காட்சிகளே வந்தாலும் நித்யா மேனன் தனித்து நிற்கிறார். குறிப்பாக படத்தின் இறுதியில் ஷாலினி பாண்டே உடனான காட்சியில் அவரது நடிப்பே சொல்லிவிடும் நித்யா மேனன் சிறந்த நடிகை என்று. அவருக்கு இன்னும் கூடுதல் காட்சிகளை எழுதி இருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ் மீண்டும் தனது பின்னணி இசையால் ஈர்க்கிறார். ‘என் பாட்டன் சாமி’, ‘என்ன சுகம்’ பாடல்கள் இனிமை. கிரண் கவுசிக்கின் கேமரா கண்ணுக்கு குளிர்ச்சி. ஆக்ஷன் காட்சிகளில் பெரிய சுரத்தை இல்லை. படத்தில் இன்னொரு பிரச்சினையாக தோன்றியது கிராமத்தில் இருந்து வாழ்க்கையை தேடி நகரத்துக்கு செல்பவர்களை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குவது போன்ற வசனங்கள். குறிப்பாக கிரைண்டரில் மாவு அரைப்பது தொடர்பாக ராஜ்கிரண் பேசும் வசனங்கள் மிகவும் பிற்போக்குத்தனமாக தோன்றுகிறது.
கிராமத்து பின்னணி, குடும்ப சென்டிமென்ட் விரும்பும் ஆடியன்ஸை டார்கெட் செய்யும் எளிய கதைக்களத்துடன் இறங்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ள தனுஷ், இன்னும் நேர்த்தியான திரைக்கதையையும் எழுதியிருந்தால், ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் போனி ஆகியிருக்கும் இந்த ‘இட்லி கடை’