துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இருப்பினும் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வழங்கப்படவில்லை. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கோப்பையை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி சொல்லி உள்ளதாக பாகிஸ்தான் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. தொடர்ந்து இந்திய அணி வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து பெற முடியாது என தெரிவித்தது. ‘நான்தான் கோப்பையை வழங்குவேன்’ என மோசின் நக்வி தெரிவித்தார். அதை இந்திய அணி ஏற்க மறுத்தது. இதையடுத்து மோசின் நக்வியின் அறிவுறுத்தலின் படி, அலுவலர் ஒருவர் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றார். இது சர்ச்சையானது.
இந்திய அணி கோப்பையே இல்லாமல் வெற்றியை கொண்டாடியது. இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும் பதக்கங்களையும் அவர் எடுத்துச் செல்ல முடியாது. விரைவில் அது இந்திய அணியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று நம்புகிறோம்.
வரும் நவம்பர் மாதம் துபாயில் ஐசிசி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் நாங்கள் பாகிஸ்தானின் மோசின் நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம்.” என்றார்
இந்த சூழலில் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு துபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வழக்கமான ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்திய அணியின் வசம் கோப்பையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த கூட்டம் அது தொடர்பானது அல்ல என மோசின் நக்வி தெரிவித்துள்ளதாக தகவல். இந்திய அணிக்கு கோப்பை வேண்டுமானால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்துக்கு நேரில் வந்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதை பாகிஸ்தான் ஊடக நிறுவனமான ஜியோ சூப்பர் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் விர்ச்சுவல் முறையில் பங்கேற்றதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.