41 உயிர்களை துள்ளத் துடிக்க பறித்த ஒரு தேசிய துயரம், ஆதாயம் தேடும் சில அரசியல் கட்சிகளால் அதன் பாதையிலிருந்து மெல்ல விலகி, முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கரூர் சம்பவத்திற்கு தார்மிக பொறுப்பேற்று களத்தில் நின்று கஷ்டத்தைப் போக்க வேண்டிய தவெக, சதி என பழியை ஆளும் கட்சி மீது போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறது. இதன் மூலம், தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் திமுக தான் என்பது போல் அரசியல் அனுதாபம் தேடவே பார்க்கிறது தவெக.
அதேசமயம், தங்களை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்க காத்துக் கொண்டிருந்த திமுக, இந்தச் சம்பவத்தில் யாரும் அரசியல் அனுதாபம் தேடிவிடக் கூடாது என்பதற்காக சில உடனடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. கரூருக்கு மறுநாள் காலையில் வருவார் என்று சொல்லப்பட்ட முதல்வர் நள்ளிரவே கரூருக்குப் புறப்பட்டு, ஆகவேண்டிய காரியங்களை முடுக்கிவிட்டார். அதையெல்லாம் சொல்ல மனமில்லாதவர்கள், இப்படி அதீத அக்கறை எடுத்துக் கொண்டதும் அரசியல் தான் என விமர்சிக்கவே செய்தார்கள்.
அதேசமயம், இந்த விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் போலீஸார், கதாநாயகன் விஜய்யை கண்டுகொள்ளாமல் விட்டதும் அரசியல் தான் என்ற விமர்சனங்களும் வருகின்றன. விஜய் மீது கைவைத்தால் அது எதிர்மறை அரசியலாக்கப்பட்டு ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலையை மக்கள் மனதில் விதைத்துவிடும் என்பதே இதற்குள் இருக்கும் அரசியல் கணக்கு என்கிறார்கள்.
திமுக-வுக்கு எதிரான விமர்சனங்கள் இப்படி என்றால் அதிமுக – பாஜக கூட்டணியும் இதில் அரசியல் லாபம் பார்க்கவே ஆர்வப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவுகளுக்கு டெல்லியிலிருந்து குழுவை அனுப்பாத பாஜக, கரூருக்கு அனுப்புகிறது. பழனிசாமியும் அண்ணாமலையும் விஜய் மீது தவறே இல்லை என்ற தொனியிலேயே பேசுகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்யவில்லை என்பதே இவர்களின் கூட்டுத் தாக்குதலாக இருக்கிறது.
கரூர் சம்பவத்தில் சதி நடந்திருப்பதாகச் சொல்லி சிபிஐ விசாரணை கோருகிறது தவெக. இந்தச் சூழலில், இந்த இக்கட்டில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு ஆறுதலாக பேசுவது போல் பேசி அவரை தங்கள் பக்கம் ஈர்க்கலாமா என்ற நப்பாசை பாஜக கூட்டணிக்கு இருக்கிறது. அதனால் தான் சிபிஐ விசாரணை தேவை என்று அதிமுக-வும் பாஜக-வும் தவெக உடன் ஒத்து ஊதவும் ஆரம்பித்திருக்கின்றன. அதேசமயம், சிபிஐ விசாரணை நடந்தால் அதன் முடிவுகளை வைத்தும் விஜய்க்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கத் தயங்காது பாஜக என்று மற்ற மாநிலங்களில் நடந்த ‘சிபிஐ அரசியல்’ ஆட்டங்களை ஞாபகப்படுத்தி சிலர் இப்போதே கொளுத்திப் போடுகிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “திமுக-வையும் குறை சொல்லாமல், விஜய் தரப்பையும் சமாதானப்படுத்தும் விதமாக பாஜக சில வேலைகளைச் செய்கிறது. திமுக-வோ இதை வைத்து விஜய்யின் அரசியல் பயணத்தை அஸ்தமிக்க வைத்துவிடலாம் என நினைக்கிறது. இழந்த செல்வாக்கை மீட்கப் பார்க்கிறது அதிமுக. இப்படி, அனைத்துக் கட்சிகளுமே கரூர் துயரத்தை வைத்து முடிந்தவரைக்கும் அரசியல் லாபம் தேடவே முயற்சிக்கின்றன” என்றார். எது எப்படியோ, கரூரில் காவுகொடுக்கப்பட்ட 41 உயிர்களை வைத்தே 2026 தேர்தல் களம் நகரக்கூடிய அவலமும் ஏற்படும் போலிருக்கிறது!