மீன்வளம் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் மட்டுமல்லா மல் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங் கள் என்று பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் பாடப்பிரிவுகளில் சேருவதில் ஆர்வத்துடன் இருக்கும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய படிப்புகளில் மீன்வளப் படிப்புகளும் முக்கியமானவை.
என்ன படிக்கலாம்? – தமிழ்நாட்டில் பிஎப்எஸ்சி நான்கு ஆண்டுப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதப் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். அல்லது இயற்பியல், வேதி யியல், உயிரியல் பாடங்களுடன் பயோ டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், வேளாண்மை, தோட்டக்கலை, இன்ஃபர்மேட்டிக்ஸ் பிராக்டிசஸ், என்விரான்மென்டல் பிராக்டிசஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடத்தை எடுத்துப் படித்தவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம்.
பி.டெக். ஃபிஷரீஸ் இன்ஜினீயரிங் நான்கு ஆண்டுப் பட்டப் படிப்பில் சேர விரும்புவோர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவு களைப் படித்திருக்க வேண்டும். அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஃபர்மேட்டிக்ஸ் பிராக்டிசஸ் படித்தவர்களும் விண்ணப் பிக்கலாம். பி.டெக். பயோ டெக்னாலஜி படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களையோ இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளையோ படித்திருக்கலாம்.
அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பயோ டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், வேளாண்மை, தோட்டக்கலை, இன்ஃபர்மேட்டிக்ஸ் பிராக்டிசஸ், என்விரான்மெண்டல் பிராக்டிசஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடத்தை எடுத்துப் படித்தவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம்.
பி.டெக். ஃபுட் டெக்னாலஜி படிப்பில் சேர விரும்புவோர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஃபர்மேட்டிக்ஸ் பிராக்ட்டிசஸ் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்கலாம்.
வேறு சில படிப்புகள்: பிபிஏ (ஃபிஷரீஸ் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட்), பி.விஓசி. (இன்டஸ்ட் ரியல் ஃபிஷ் புராசசிங் டெக்னாலஜி, பி.விஓசி. (இன்டஸ்ட்ரியல் ஃபிஷ்ஷிங் டெக்னாலஜி), பி.விஓசி. (இன்டஸ்ட் ரியல் அக்வாகல்சர்) ஆகிய பாடப்பிரிவு களில் பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் சேரலாம். பிளஸ் டூ வகுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களுக்கு பிஎப்எஸ்சி படிப்பில் 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு பிஎப்எஸ்சி, பிடெக், பிபிஏ ஆகிய பாடப் பிரிவுகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த ஒதுக் கீட்டின்கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கிறது.
மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5 சதவீத ஒதுக்கீடு அதாவது, பிஎப்எஸ்சி படிப்பில் 6 இடங்களும் பிடெக் (ஃபிஷரீஸ் இன்ஜினீயரிங்) படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படிப்புச் செலவைத் தமிழ்நாடு மீனவர்கள் நல வாரியம் ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மீன்வளம் தொடர்பான பல்வேறு சிறப்புப் பாடப்பிரிவுகளில் எம்டெக் படிப்பும் எம்பிஏ ஃபிஷரீஸ் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட் படிப்பும் உள்ளன.
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட்: மீன்வளம் குறித்த படிப்புகளைப் படிக்க நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று மும்பையில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் எஜுகேஷன். 1961ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மீன்வளம் குறித்த பல்வேறு சிறப்புப் பாடப்பிரிவுகளில் எம்எப்எஸ்சி முது நிலைப் பட்டப்படிப்பைப் படிக்கலாம். இது தவிர, தேசிய அளவிலும் மாநில அளவிலும் மீன்வளம் தொடர்பாகப் பல்வேறு கல்வி, ஆராய்ச்சி நிறுவ னங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மீன்வளப் படிப்புகளுக்காக நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2012இல் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படுகிற கல்வி நிலையங்கள்: மீன்வளக் கல்லூரி மீன்வளப் படிப்புகள் – ஆராய்ச்சி நிறுவனங்கள் (தூத்துக்குடி, பொன்னேரி, நாகப்பட்டினம் தலைஞாயிறு), மீன்வளப் பொறியியல் கல்லூரி (நாகப்பட்டினம்), இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் பயோடெக்னாலஜி (வன்னியன்சாவடி), பாராபுரஃபெஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்வாகல்சர் டெக்னாலஜி, ஃபிஷரீஸ் பிசினஸ் ஸ்கூல் (முட்டுக்காடு), காலேஜ் ஆஃப் ஃபிஷ் நியூட்ரிஷன் அண்ட் ஃபுட் டெக்னாலஜி, பாராபுரஃபெஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் டெக்னாலஜி (மாதவரம்), பாராபுரஃபெஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் ஃபிஷ்ஷிங் டெக்னாலஜி (ராமநாதபுரம்)
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com