கரூர்: “முதல்வர், மற்ற தலைவர்களைப் போல நினைத்து விட்டீர்களா? விஜய் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராளமானோர் வருவார்கள். அதை கணிக்க தவறிவிட்டீர்களா?” என்று தவெக தரப்புக்கு கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.
இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்ற விவாதங்களின் விவரம்:
நீதிபதி பரத்குமார்: “விஜய் பரப்புரையை காண 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என கணித்ததே தவறு. நீங்கள் உங்கள் தலைவரை முதல்வர், மற்ற தலைவர்களைப்போல நினைத்து விட்டீர்களா? அவர் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராளமானோர் வருவார்கள். அதை கணிக்க தவறிவிட்டீர்களா?”
கரூர் டிஎஸ்பி செல்வராஜ்: “பிற்பகல் 3 மணிக்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது.”
நீதிபதி (தவெகவினரிடம்): “நிர்வாகிகள் யாரும் தகவலை உங்கள் தலைவருக்கு சொல்லவில்லையா? கூட்டம் அளவை கடந்து சென்றது என தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை?”
தவெக: “கூட்ட நெரிசலுக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும். விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்தது தானாக வந்த கூட்டம். யாரையும் அழைத்து வரவில்லை.”
நீதிபதி: “அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா?. அவரவர் உயிரை காப்பாற்ற அவரவர் ஓடுகின்றனர். தவறு யார் மீது உள்ளது சொல்லுங்கள்.”
டிஎஸ்பி செல்வராஜ்: “பிரச்சார வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்தவுடன் போதும் என்றேன். ஆனால், ஆதவ் அர்ஜுனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார். முனியப்பன் கோயில் பகுதியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். அப்போது விஜய் கேரவன் உள்ளே சென்று விட்டார். அங்கேயே விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். விஜயின் வாகனம் உள்ளே சென்றபோதுதான் நெரிசல் ஏற்பட்டது.”
நீதிபதி: “விஜய்யை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும். நீங்கள் கேட்ட 3 இடமுமே கூட்டத்துக்கு போதுமானதல்ல. இதே இடத்தில் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சி தலைவரை பார்க்க வந்தவர்கள் அவர்களது கட்சியினர். ஆனால், விஜயை பார்க்க அனைவரும் வருவார்கள். காலாண்டு விடுமுறை, வார விடுமுறை உள்ள நிலையில் ஏன் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை” என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அப்போது, போலீஸார் தங்களை ஒருமையில் பேசுவதாக நீதிபதியிடம் தவெகவினர் முறையிட்டனர். அதற்கு நீதிபதி, “அவர்களை அடிக்கவோ, ஒருமையில் பேசவோ கூடாது” என போலீஸாருக்கு அறிவுறுத்தியதுடன், இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.