மதுரை: கரூரில் செப்.27-ம் தேதி தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது கரூர் போலீஸார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று தனித்தனியாக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராதது. துரதிருஷ்டவசமானது. அனுமதி கோரும் கடிதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் கூட்டம் கூடியது. பெண்கள், குழந்தைகள் பொதுக் கூட்டத்துக்கு வரவேண்டாம் என தவெக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், போலீஸார் உரிய வழி முறைகளை வகுக்கத் தவறிவிட்டனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது மற்றும் பாதுகாப்புக்குப் போதுமான எண்ணிக்கையில் போலீஸாரை நிறுத்தாதது ஆகியவை கரூர் துயரச் சம்பவத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. கரூரில் கூட்டம் நடத்த செப். 25-ம் தேதி வரை எங்களுக்கு போலீஸார் எந்த எச்சரிக்கை அறிவிப்பும் தரவில்லை.
கூட்டம் அதிகமானதும் சில சமூக விரோதிகள் கூட்டத்துக்குள் நுழைந்து விஜய் மீது காலணியை வீசினர். மாற்று வழி இருந்தும், பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் போலீஸார் அனுமதித்தனர். குண்டர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே கூட்டத்துக்குள் நுழைந்து தொண்டர்களையும், பொதுமக்களையும் ஆயுதங்களால் தாக்கினர். போலீஸாரும் தடியடி நடத்தினர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த வழக்கில் எங்களை அரசியல் காரணங்களுக்காக சேர்த்துள்ளனர். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அக். 3-ம் தேதி நடைபெறும் தசரா விடுமுறைக்கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.