திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் இரு 660 மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்த கட்டுமான பணியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தற்போது, சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், அனல்மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில் நேற்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென இரும்பு கம்பிகளால் ஆன முகப்பு பகுதியில் உள்ள சாரம் சரிந்து விழுந்தது.
இதில், படுகாயமடைந்த பலரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்குறித்து தகவலறிந்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சம்பவ இடம் விரைந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், விபத்து குறித்து தீவிர ஆய்வு செய்தனர். இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு விரைந்து, தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
நிவாரணம் அறிவிப்பு: இதனிடையே விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அமைச்சர் சிவசங்கரை அனுப்பியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் மோடியும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.