கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வருகிறது அதிமுக. ஆனால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் அவர்களின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை. காரணம், பாஜக சகவாசம். இங்குள்ள சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் தேர்தலுக்குத் தேர்தல் திமுக-வுக்கு கைகொடுப்பதால் கொங்கு மண்டலத்தில் இந்தத் தொகுதி திமுக கோட்டையாகவே இருக்கிறது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் சமுதாய வாக்குகள் உள்ளன. இது தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவீதமாகும். தேர்தலுக்குத் தேர்தல் அரவக்குறிச்சியின் அரசியல் தலையெழுத்தை எழுதுவதும் இந்த வாக்குகள் தான்.
2011-ல், முன்னாள் எம்எல்ஏ-வான கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் தற்போதைய பாஜக மாவட்டத் தலைவரான வி.வி.செந்தில்நாதனும் அரவக்குறிச்சியில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் முன்னணியிலேயே இருந்து வந்த செந்தில்நாதன், பள்ளபட்டி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததுமே பின்னடைவை நோக்கிப் பயணித்தார். முடிவில் செந்தில்நாதனை விட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று கே.சி.பழனிசாமி எம்எல்ஏ ஆனார்.
அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்தும் தன்னால் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையில் வாக்குச் சாவடியிலேயே கதறி அழுதார் செந்தில்நாதன். அப்போது, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்றில் அதிமுக ஜெயித்திருந்த நிலையில், பள்ளபட்டி முஸ்லிம்களின் புண்ணியத்தில் அரவக்குறிச்சியில் மட்டும் திமுக கொடி நாட்டியது.
ஆனால், கே.சி.பழனிசாமி மீதிருந்த அதிருப்தியின் காரணமாக, 2016-ல் மீண்டும் போட்டியிட்ட அவரைத் தோற்கடித்த அரவக்குறிச்சி மக்கள், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தார்கள். அதிமுக-வுக்குள் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் செந்தில்பாலாஜியின் எம்எல்ஏ பதவி நீதிமன்றத்தால் பறிக்கப்பட்ட நிலையில், 2019-ல் அரவக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல் வந்தது. அப்போது திமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில்பாலாஜி அதிமுக வேட்பாளரான வி.வி.செந்தில்நாதனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், 2021-ல் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அரவக்குறிச்சியில் துணிந்து போட்டியிட்டார். அப்போது அண்ணாமலைக்கு இருந்த பிரபல்யத்தை எல்லாம் தாண்டி, திமுக சார்பில் போட்டியிட்ட சாமானியரான மொஞ்சனூர் ரா.இளங்கோ வெற்றிபெற்றார். அதற்கு பிரதானக் காரணம், பள்ளபட்டி முஸ்லிம் வாக்குகள்.
இப்போது மீண்டும் பாஜக உடன் அதிமுக கைகோத்திருக்கும் நிலையில் அரவக்குறிச்சியில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடப்போவது பாஜக-வா, அதிமுக-வா என வாதப் பிரதிவாதங்கள் தலைதூக்கி இருக்கின்றன. அதேசமயம், இந்தத் தொகுதி பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டால் மீண்டும் இங்கு போட்டியிட்டு பலத்தை சோதிக்க தயாராகவே இருக்கிறார் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன்.
ஆனால், இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் மற்ற நிர்வாகிகளோ, “இரண்டு தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போயிருக்கிறார் செந்தில்நாதன். ஆனானப்பட்ட அண்ணாமலையையே அரவக்குறிச்சி மக்கள் தோற்கடித்து விட்டார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது கண்கூடாகவே தெரிகிறது. அதனால், மறுபடியும் அரவக்குறிச்சியை வம்படியாக கேட்டு வாங்கி தோற்றுப் போவதைக் காட்டிலும் கரூர் அல்லது குளித்தலை தொகுதியை கேட்டு வாங்கி அங்கே பாஜக போட்டியிட்டால் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.
2019 இடைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில்பாலாஜிக்கு 2021-ல் மீண்டும் அங்கு போட்டியிட விருப்பமில்லை. கரூர் தொகுதியில் போட்டியிடுவதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால், செந்தில்பாலாஜியும் அதிமுக வேட்பாளரான அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய கவுண்டர் சமுதாயத்து முக்கியஸ்தர்கள், “இருவருமே வெற்றிபெற்று வரும் வகையில் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுங்கள்” என்று ஆலோசனை சொன்னார்கள். ஆனால், தான் சிட்டிங் அமைச்சர் என்பதால் தொகுதி மாறமுடியாது என எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியாகச் சொல்லிவிட்டதால் வேறு வழியின்றி இருவருமே மோதி முடிவில் செந்தில்பாலாஜி வெற்றிபெற்றார்.
இந்த நிலையில், கரூரில் இம்முறையும் செந்தில்பாலாஜி தான் திமுக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்பதால் கரூர் திமுக-வில் எந்தப் பரபரப்பும் இல்லை. மாறாக, அரவக்குறிச்சியில் போட்டியிடத் தான் திமுக-வுக்குள் அடிதடியே நடக்கும் போலிருக்கிறது. சிட்டிங் எம்எல்ஏ-வான மொஞ்சனூர் ரா.இளங்கோ, நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் பரணி மணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் அரவக்குறிச்சிக்காக அறிவாலயத்தைச் சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இம்முறை மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிடுவீர்களா என பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதனிடம் கேட்டதற்கு, “பாஜக தலைமை என்னை எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொன்னாலும் போட்டியிட தயாராய் இருக்கிறேன். நான் இல்லாவிட்டாலும் எந்தத் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமூச்சுடன் உழைப்போம்” என்றார்.
அரவக்குறிச்சியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பள்ளபட்டி ஜாதகம் இம்முறையும் திமுக-வுக்கு சாதகமாக இருக்கிறதா அல்லது என்டிஏ கூட்டணிக்கு ஏற்றம் தருகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!