அதிமுக கூட்டணியில் இம்முறை தங்களுக்கு 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் பாஜக, குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொகுதியையாவது கேட்டுப்பெற வேண்டும் என்ற திட்டத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் தங்களுக்கு கூடுதல் செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் இம்முறை கூடுதலாக ஒரு தொகுதியை கேட்கவிருப்பதாக பாஜக-வினர் பேச ஆரம்பித்திருப்பது கோவை அதிமுக-வினர் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கோவை தெற்கை பாஜக-வும் மற்ற 9 தொகுதிகளை அதிமுக-வும் கடந்தமுறை கைப்பற்றின. அதேபோல் மக்களவைத் தேர்தலில் அதிமுக துணையின்றி போட்டியிட்ட பாஜக-வின் அண்ணாமலை, சுமார் நாலரை லட்சம் வாக்குகளைப் பெற்று அதிமுக-வை மூன்றாமிடத்துக்கு தள்ளினார்.
அதிலும் குறிப்பாக, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக-வை விட பாஜக-வுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்தன. இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் இம்முறை தங்களுக்கு கோவையில் கூடுதலாக இன்னொரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என பாஜக-வினர் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய கோவை மாவட்ட பாஜக மூத்த நிர்வாகிகள், “வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை கேட்பது எல்லா கட்சிகளிலும் உள்ளதுதான். கோவை தெற்கு பாஜக-வுக்கு சிட்டிங் தொகுதி என்பதால் இம்முறையும் அதை எங்களுக்கு ஒதுக்குவதில் சிக்கல் இருக்காது. இதைத் தவிர இன்னொரு தொகுதியை நமக்கு கேட்டுப்பெற வேண்டும் என பாஜக தலைமையை வலியுறுத்தி வருகிறோம்.
இன்றைய நிலவரப்படி கோவை தெற்கு, வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் தொகுதிகளில் பாஜக வலுவாக இருக்கிறது. இதில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. கோவை வடக்கை கொடுத்தால், வடக்கு, தெற்கு இரண்டிலுமே இம்முறை நாங்கள் நிச்சயம் ஜெயிப்போம்.

மக்களவைத் தேர்தலில் கோவை வடக்கில் பாஜக 71,174 வாக்குகளும், திமுக 80,963 வாக்குகளும் பெற்றன. அதிமுக 28,998 வாக்குகளை மட்டுமே பெற்றது. கவுண்டம்பாளையத்தில் பாஜக-வுக்கு 1,04,549 வாக்குகளும், திமுக-வுக்கு 1,29,009 வாக்குகளும் கிடைத்தன. அதிமுக 52,110 வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்தத் தொகுதிகளில் பாஜக-வுக்கும் அதிமுக-வுக்கும் விழுந்த வாக்குகளை கூட்டினால் திமுக-வை விட அதிகம். நாங்கள் இந்தத் தொகுதிகளை குறிப்பிட்டுக் கேட்பதற்கு இதுவும் ஒரு காரணம்” என்றனர்.
கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார் இதுகுறித்து நம்மிடம், ‘‘கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 4 தொகுதிகளில் ஏதாவது இரண்டை இம்முறை நமக்கு ஒதுக்க வேண்டும் என தலைமைக்கு வலியுறுத்தியுள்ளோம். கோவை தெற்கு சிட்டிங் தொகுதி என்பதால் அது கிடைத்துவிடும். கூடுதலாக கோவை வடக்கு அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
அதிமுக கோட்டையான கோவையில் பாஜக கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பது அதிமுக-வினர் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. காரணம், பாஜக எதிர்பார்க்கும் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வாக மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் இருக்கிறார். இதேபோல் கவுண்டம் பாளையம் தொகுதி எம்எல்ஏ-வாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இருக்கிறார். இவர்கள் இருவருமே இரண்டாவது முறையாக எம்எல்ஏ-வாக இருப்பவர்கள்.
அதுவும் 2016-ல் கோவை தெற்கு எம்எல்ஏ-வாக இருந்த அம்மன் அர்ச்சுணன் வானதி சீனிவாசனுக்காக கடந்தமுறை தனது தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு வடக்கு தொகுதிக்கு மாறினார். இப்போது பாஜக-வினர் அந்தத் தொகுதியையும் குறிவைப்பதால் அம்மன் அர்ச்சுணன் கலக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கோவையை பொறுத்தவரை யார் என்ன சொன்னாலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது. எனினும் டெல்லியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் அவர், பாஜக கேட்கும் கூடுதல் தொகுதிக்கு தலையாட்டினாலும் ஆட்டிவிடலாம் என்பதே அதிமுக-வினரின் கலக்கத்துக்கு அதிமுக்கிய காரணம்!