சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தில் பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் தலையீடு அவசியம்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கரூர் துயரச் சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கும் வகையில் பாஜக எம்.பி.-க்கள் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. எனவே, பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.-க்கள் கொண்ட குழுவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நியமனம் செய்ய வேண்டும். அவர்களை கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பாஜகவின் சதி முறியடிக்கப்பட வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக இருக்கிறது.
கரூர் துயரை திசைதிருப்ப நினைப்பவர்கள், சிபிஐ விசாரணை என்னும் கோரிக்கையை முன்வைக்கின்றனர். தொடர்ந்து அரசியல் பிரச்சினை யாக தேர்தல் வரை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இந்த கொடுந்துயரை வைத்து அரசியல் செய்ய நினைப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான துரோகம். எந்த காரணத்தைச் சொன்னாலும் தவெக தலைவர் விஜய், இந்த சம்பவத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் தலைவர் என்ற முறையில் தன்னைத் தேடி வருவோருக்கு பாதுகாப்பு அளிப்பதில் தனக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
காவல் துறை, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தட்டிக் கழித்து ஓடிவிட முடியாது. அறிவிப்பு செய்த நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக ஒரே இடத்தில் மக்களைக் காத்திருக்க வைப்பது கொடுமையானது. இதை விஜய் உணர வேண்டும். இனிமேல் காலம் தாழ்ந்து நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்பதை தலைவர்களுக்கு கரூர் சம்பவம் உணர்த்தியுள்ளது. விஜய் காலம் தாழ்த்தியதற்கு அவருடன் இருப்பவர்கள் காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.