சென்னை: அறிவுரை கழக உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உடனடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைத்தின் விசாரணை சந்தேகத்திற்கு உரியது. அரசு பணத்தில் சலுகை பெறுபவர் எப்படி நேர்மையானவராக இருப்பார்.
மேலும், தென்மண்டல அறிவுரைக்கழக ஆலோசனை குழு உறுப்பினராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நேர்மையாக இருக்கும் என கூறமுடியாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.
ஆனால், காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சரியாக இருக்காது. என்ன நோக்கத்திற்காக ஆணையம் அமைக்கப்படுகிறது? அதன் செயல்பாடுகள் என்ன? என முறையான அறிவிப்புகளை அரசு வெளியிடாமல், அவசரகதியில் அமைக்கப்பட்ட ஆணையம் மக்களை சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.
கட்சி கூட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ள நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் பேரில் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது நீதிமன்ற விசாரணைக்கு எதிரானது.
மக்களுக்கு முறையான அறிவிப்புகள் இல்லாமல் திடீரென சந்தித்து விசாரணை நடத்துவது அரசியல் காரணங்களுக்கு தான் என தெரிவித்த அவர், அருணா ஜெகதீசன் ஆணையத்தில் இருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.