சென்னை: “முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு கரூர் சம்பவத்தை அணுகியுள்ளார். களத்தில் நிற்க வேண்டிய தலைவர்கள், ஏன் கரூரில் களத்திலே நிற்கவில்லை?” என திமுக எம்.பி.யும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தவெக தலைவர் விஜய் கரூரில் கலந்துகொண்ட பிரச்சார நிகழ்ச்சியில் விலை மதிக்க முடியாத 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். அரசியல் மனமாச்சரியங்களை தாண்டி இழந்தது மனித உயிர்கள் என்கின்ற அந்த அரிய உணர்வோடு, உன்னதமான உணர்வோடு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சென்று, அவர்களை எல்லாம் சந்தித்து நிவாரணம் அறிவித்து இரவே திரும்பி இருக்கிறார்.
திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நெடிய வரலாற்றில் இப்படித்தான் ஒரு தலைவர் இயங்குவார் என்பதற்கு அண்ணா காலத்திலிருந்தே முன்னுதாரணங்கள் உள்ளன. 2001-ஆம் ஆண்டு கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்து, மிகப் பெரிய பேரணி ஒன்று நடந்தபோது, வன்முறையை தூண்டிவிட்டார்கள். அரசாங்கத்தினுடைய ஆதரவோடு தூண்டப்பட்ட வன்முறையில் அன்றைக்கு பல பேர் காயமடைந்தார்கள். சிலர் உயிரிழந்தார்கள். ஆனால், அந்தக் கோர சம்பவம் நடந்து கொண்டிருக்கிறபோதே, கருணாநிதி தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், அதே இடத்துக்குச் சென்றார்.
அதேபோல கரோனா கோரத்தாண்டவம் ஆடியபோது, பிரதமர் உட்பட, தமிழ்நாட்டுடைய அமைச்சர்கள் உட்பட, இந்தியாவில் எந்த அமைச்சரும் எந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் வெளியே வர தாங்கிய காலத்தில், அப்போது “ஒன்றிணைவோம் வா! ஒன்றிணைவோம் வா!” என்றொரு முழக்கத்தை எழுப்பி, சட்டமன்ற உறுப்பினர்களை – மாவட்ட கழக செயலாளர்களை – அவரே வெளியே வந்து பொதுமக்களுக்கு எல்லா நிவாரணம் நிவாரணத்தையும் வழங்கிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அவர்தான் இன்றைக்கு இருக்கின்ற எங்களுடைய முதல்வர்.
எனவே எப்போது வந்து ஒரு தேவை வருகிறதோ, ஒரு பரபரப்பான பதற்றம் வருகிறதோ, மக்களுக்கு தேவை வருகிறதோ, அப்போது எங்களுடைய உயிரையும் பணயம் வைத்து களத்திலே போய் நிற்பதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு என்பதற்காகச் சில உதாரணங்களை சொன்னேன். அதைப்போலவே, இப்போது எங்களுடைய முதல்வர் செய்திருக்கிறார். இதிலே அரசியல் கிடையாது.
ஆனால், எனக்கு தனிப்பட்ட முறையிலே சில கேள்விகள் இருக்கிறது. இப்படி களத்திலே நிற்க வேண்டிய தலைவர்கள், ஏன் கரூரில் களத்திலே நிற்கவில்லை? செய்தி அறிந்ததற்கு பிறகும் அவசரவசரமாகச் செய்தியாளர்களை சந்திப்பதற்குகூட வெட்கப்பட்டுக் கொண்டு, பயந்து கொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்?
ஒன்றை என்னால் உணர முடிகிறது. அவர் ஒரு பிரபலமான நடிகர். அவர் இருந்தால் மீண்டும் கும்பல் கூடும். எனவே, அவர் திருச்சியில் தங்கியிருக்கலாம். அங்கிருந்தபடியே இப்போது ட்வீட் போடுகிறார்களே, இப்போது உடன் இருக்கிறார்களே, அந்தத் தலைவர்கள் எல்லாம் ஏன் போய் களத்திலே நின்று, அவர்களுடைய காயத்துக்கு மருந்து போட்டு, இறப்புக்கு நிவாரணம் கொடுத்து, அவர்களுக்கு ஏன் ஆறுதல் சொல்லவில்லை? அவர்களை அறியாமல் அவர்களிடத்தில் கில்ட்டி கான்ஷியஸ் – குற்ற உணர்வு இருக்கிறது. நம்மால்தான் இது நடந்தது என்கின்ற ஒப்புதல், அவர்கள் மனசாட்சியில் இருக்கிற காரணத்தினால், அவர்கள் ஓடி வந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
அதையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை. அதிலே முக்கியமான இடத்திலே அந்த இயக்கத்துக்குப் பணம் கொடுக்கிற, ஒரு முக்கியமான இடத்தில இருக்கிற ஆதவ் அர்ஜுனா என்கின்ற நபர் ஒரு ட்வீட் போடுகிறார். அந்த ட்வீட்டில் நேபாளத்தில் நடந்தது போல, இங்கு ஒரு புரட்சி நடக்கும் என்கிறார். அகில இந்தியாவினுடைய வளர்ச்சியே வெறும் 8.5%, ஆனால் இங்கு 12% நெருங்கி விட்டது.
இங்கு அமைதியாக இருக்கிற தமிழ்நாட்டில், வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டில் ஒரு புரட்சி வர வேண்டும் என்று இந்தியாவினுடைய இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கு எதிராக சொல்கிறார்கள். அரசியலமைப்புக்கு எதிரான ஒரு கருத்தைப் பதிவிட்டு, அதற்கு விமர்சனம் வந்த உடனே எடுக்கிறார்.
நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்தப் பதிவை எடுக்கிற அளவிற்கு தமிழ்நாட்டுடைய மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள். இந்த உணர்வு அவர்களுக்கு தெரிந்த பிறகுதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய கேள்வி, பதிவு போட்ட அவரோ அல்லது அவரை கண்டித்தோ அந்த கட்சியினுடைய தலைவர் இதுவரை அவரை கண்டித்திருக்கிறாரா அல்லது செய்தது தவறு என்று ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறாரா?
எனவே எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல்தான் சிறுபிள்ளைத்தனமாக இப்படி நடந்து கொள்வது, தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லதா என்பதை நான் தனிப்பட்ட முறையில் உங்களிடத்திலே கேட்க விரும்புகிறேன்.
முதல்வர் அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, இங்கு நடந்த சம்பவத்தை மிக நாகரிகமாகவும், பண்புள்ள அரசியல் தலைவராகவும், முதிர்ச்சி அடைந்த அரசியல் தலைவராகவும் அணுகி இருக்கிறார். அரசாங்கத்தின் சார்பில் அணுகியிருக்கிறார்; திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அணுகியிருக்கிறார்.
எங்களுடைய அமைச்சர்கள், எங்களுடைய மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் களத்தில் இருக்கிறார்கள். இதைவிட ஒரு இயக்கமோ அல்லது ஒரு தலைவனோ இப்படிப்பட்ட ஒரு நிகழ்விலே எதிர்கொள்ள இயலாத அளவுக்கு ஒரு தனிப்பெரும் தலைவராக இருக்கிறார்.
ஆனால், எனக்கு ஏற்பட்ட அந்த இரண்டு கேள்விகள்: ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்? ஏன் மக்களிடம் இதுவரை நீங்கள் செல்லவில்லை? நீங்கள் செல்ல வேண்டாம், நீங்கள் நடிகர். ஆனால் உங்கள் சார்பில் இருந்த தளகர்த்தர்கள், அந்த மாவட்டத்து தளகர்த்தர்கள், பக்கத்து மாவட்ட தளகர்த்தர்கள், மாநில பொறுப்பாளர்கள் இதுவரை ஏன் செல்ல தயங்குகிறீர்கள்? அது நீங்கள் உங்களுடைய குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது என்றுதானே பொருள்.
இன்னொன்று, இப்படிப்பட்ட பதிவுகளை எல்லாம் போடுகிற ஒருவரை கண்டிக்காமல், கட்சியை விட்டு நீக்காமல் இன்னமும் உங்களோடு வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, இது இந்திய அரசியலுக்கு – தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லதா என்பதை கேட்க விரும்புகிறேன்” என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.