சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கூட்டாக சில வீடியோ காட்சிகளுடன் விளக்கமளித்தனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தவெகவினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டரான பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்று மதியம் 3 மணியளவில் தவெக தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டார். மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் தமிழக அரசு தரப்பில் அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “கரூர் பிரச்சாரத்துக்கு விஜய்யின் தவெக தரப்பிலிருந்து 7 இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அவர்கள் கேட்ட இடங்களில் ஒன்றின் அருகே கால்வாய் மற்றும் பெட்ரோல் பங்க் இருந்தது. அதனாலேயே அந்த இடம் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் கேட்ட இடங்களில் வேலுச்சாமிபுரமும் இருந்தது. அதைத்தான் நாங்கள் ஒதுக்கினோம்.
மேலும், அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவிலேயே 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாங்களாகவே கூடுதல் நபர்கள் வரலாம் என்பதால் வேலுசாமிபுரத்தை ஒதுக்கினோம். காவல் துறை பாதுகாப்பை பொறுத்தவரை 50 பேருக்கு 1 போலீஸ் என்பதுதான் பொதுக்கூட்ட பந்தோபஸ்து விதி. 10,000 பேருக்கு 500 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தினர் என்பது தவறு. தவெக தலைவரின் வாகனம் வரும்போது, ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம் கூட்டத்தை போலீஸார் விலக்கிவிட்டனர்.
கூட்டம் நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. அதற்கான வீடியோ சான்றுகளும் உள்ளன. கூட்ட நெரிசல் அதிகமாகும்போது தவெகவினர் அமைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் கூட்டம் புகவே அங்கு ஜென் செட் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மின் விநியோகம் இருப்பதை வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. கூட்டம் நடப்பதற்கு முன்னதாகவே அப்பகுதியில் தலைவர் பேசும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மின் தடை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மின் தடை செய்ய வாய்ப்பில்லை என்று மின்வாரியம் நிராகரித்துவிட்டது என்பதையும் அரசுத் தரப்பில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே கூட்டத்துக்குள் சென்றதாகக் கூறப்படுவதும் தவறு. விஜய்யின் வாகனத்தோடு 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. தவெக தரப்பில் சில ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அரசுத் தரப்பிலும் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக முதல் தகவல் வந்தபின்னரே ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்துக்குள் சென்றன” என்றனர். இவ்வாறு கூட்டம் நடந்த இடம் ஒதுக்கீடு தொடங்கி ஆம்புலன்ஸ் வாகனம், தடியடி, மின்சார தடை சர்ச்சை வரை அனைத்துக்கும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.