மானாவாரி விவசாயத்தில் நிலக்கடலை, பருத்தி, கம்பு, சோளமும், ஆற்றுப்பாசனத்தில் பழைய ஆயக்கட்டு பகுதியில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்று வந்த பொள்ளாச்சி பகுதியில், ஆழியாறு அணை கட்டப்பட்ட பின்னர் கிடைத்த நீர்வசதியை கொண்டு நீண்டகால பயிரான தென்னைக்கு இப்பகுதி விவசாயிகள் மாறினர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்றதால், பொள்ளாச்சி தென்னை நகரமாக மாறியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தென்னை சாகுபடி பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
முன்பு தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சிக்காக போராடிய விவசாயிகள், தற்போது தென்னை மரங்களை காப்பாற்றவே திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளை ஈ தாக்குதல், கூன் வண்டு, கேரளா வாடல் நோய் மற்றும் வறட்சி ஆகியவற்றால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் தென்னை மரங்களை வெட்டி விட்டு மாற்று பயிருக்கு மாறி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தென்னை விவசாயத்தில் இருந்து பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வேளாண் பட்டதாரி ஒருவர் லாபம் ஈட்டி வருகிறார்.
பொள்ளாச்சி அடுத்த பொன்னாயூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் விஜய் (28) வேளாண் பட்டதாரியான இவர், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி அகற்றி விட்டு அங்கு உயர் தொழில்நுட்ப பசுமைக்குடில் அமைத்து அரசின் மானியத்துடன் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கல்லுாரி படிப்பு முடிந்ததும் தனியார் வங்கியில் மேலாளர் பணி கிடைத்தது. விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தால் வங்கி பணி வேண்டாம் என விவசாயத்தில் ஈடுபட்டேன். தென்னையில் நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி விட்டு அங்கு மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என்ற நோக்கத்தோடு, ஒரு ஏக்கரில் பசுமைக் குடில் அமைத்து, வெள்ளரி சாகுபடி செய்து வருகிறேன். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்யலாம். விதை, ஆள் கூலி, உரம் என ஒரு சாகுபடிக்கு மூன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது.
பசுமைக்குடிலில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி, 120 நாள் பயிராகும். ஒரு செடிக்கு காலை, மாலை, 10 நிமிடம், ஒன்றரை லிட்டர் தண்ணீர் தெளித்தால் போதும். ஒரு ஏக்கருக்கு, ஒரு முறை சாகுபடி செய்யும் போது 50 டன் வரை வெள்ளரி அறுவடை செய்யப்படுகிறது. ஒரு முறை அறுவடைக்கு ரூ. 10 லட்சம் கிடைக்கிறது இதில் முதலீட்டு செலவு ரூ. 4 லட்சம் செலவு போக ரூ.6 லட்சம் லாபம் கிடைக்கிறது. ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம்.
திறந்தவெளி பந்தல் முறையில் ஒரு ஏக்கரில், மூவாயிரம் செடிகள் நடலாம். ஆனால், பசுமைக்குடிலில், 10 ஆயிரம் செடிகள் நடவு செய்யலாம். மூன்று மடங்கு செடிகள் நடவு செய்வதுடன், உற்பத்தியும் மூன்று மடங்கு அதிகரிக்கிறது. தென்னையுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு லாபமும் கிடைக்கிறது. பசுமை குடிலில் அமைக்கப்பட்டுள் மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இந்த வெள்ளரிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் கேரளா வியாபாரிகள் நேரிடையாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.
கேரளாவில் இருந்து துபாய்க்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினமும் 5 டன் வரை தேவை உள்ளது. ஆனால் இப்பகுதியில் போதுமான அளவு வெள்ளரி சாகுபடி இல்லாததால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பசுமை குடில் அமைக்க அரசு மானியம் தருகிறது. இந்த பசுமை குடிலை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள வெள்ளரி விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரு குழுமம் அமைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.