புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன், ஆனால் சர்வதேச அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அது நிகழவில்லை என முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், “மும்பை பயங்கரவாத தாக்குதல் 2008, நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியும் கொல்லப்பட்ட நிலையில், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது நான் நிதி அமைச்சராக இருந்தேன்.
பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் அழைத்து உள்துறை அமைச்சராக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என கூறினார். உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க எனக்கு தயக்கம் இருந்தது. நிதி அமைச்சராக தொடரவே நான் விரும்பினேன். இதுபற்றி பிரதமரிடம் எடுத்துரைத்தேன். ஆனால், இது கட்சியின் முடிவு. நீங்கள் அதற்கு இணங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர், நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றேன். இதையடுத்து, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் உள்பட சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தேன். ஆனால், பதலடி கொடுக்க வேண்டாம் என்பது அரசின் முடிவாக இருந்தது.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது சரியாக இருக்காது என இந்திய வெளியுறவு அமைச்சகம் பரிந்துரைத்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த கான்டலீசா ரைஸ், இந்தியாவுக்கு விரைந்து வந்து என்னையும் பிரதமரையும் சந்தித்தார். தயவு செய்து பதிலடி கொடுக்காதீர்கள் என தெரிவித்தார். இதுபோன்ற அழுத்தங்கள் காரணமாக, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முடிவு கைவிடப்பட்டது” என தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் அரசு மென்மையாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ப. சிதம்பரம், “மென்மையாக நடந்து கொள்ளவில்லை. மாறாக, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்ற முடிவை அரசு எடுத்தது. தனிப்பட்ட முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என நான் விரும்பினாலும், வேண்டாம் என்பது அரசின் பலம் மற்றும் பலவீனத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து தற்போதைய மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையையும் 2008 சூழலையும் ஒப்பிடக்கூடாது. ஏனெனில், இடையே 17 ஆண்டுகள் இருக்கின்றன. இந்த 17 ஆண்டுகளில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. அப்போது, நமது ராணுவத்தின் தயார் நிலை உள்பட பல விஷயங்கள் காரணமாக இருந்தன. அதன் பிறகு நமது ராணுவத்தின் தயார் நிலை உள்பட பல விஷயங்கள் மறு கட்டமைக்கப்பட்டன” என தெரிவித்துள்ளார். ப. சிதம்பரத்தின் இந்த நேர்காணலை அடுத்து, பாஜக அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.