இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 3.4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். இன்னும் சொல்லப்போனால் ஒரே ஓவரில் இவர் 17 ரன்களை அன்று வாரி வழங்கியதுதான் ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் சாதகமாகத் திருப்பியது.
இதனையடுத்து வாசிம் அக்ரம், பேட்டிங்கில் ரன் மெஷின் உண்டு. ஆனால் பவுலிங்கில் இருக்கும் ரன் மெஷின் ஹாரிஸ் ராவுஃப்தான் என்று கிண்டலாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக வாசிம் அக்ரம் கூறியதாவது:
ஹாரிஸ் ராவுஃப் துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன் மெஷின்… பவுலராக. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக. நான் அவரை கிண்டலோ விமர்சனமோ செய்யவில்லை, ஒட்டுமொத்த நாடுமே அவரை விமர்சித்து வருகின்றது.
அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் ஒருநாளும் அவரால் முன்னேற முடியாது. டெஸ்ட்டில் ஆடாமல் அவரால் நன்றாக ஆடவே முடியாது. சிகப்புப் பந்திலேயே ஆட மாட்டேன் என்னும் வீரர் அணிக்குத் தேவையில்லை. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரிடம் கூற வேண்டும், “ரெட் பால் கிரிக்கெட் ஆட மாட்டீர்களா? அப்புறம் நன்றி கிளம்புங்கள்” என்று கூறிவிட வேண்டும்.
குறைந்தது 4-5 முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலாவது ஆடுங்கள். உங்கள் லெந்த் மேம்படும். அதுவும் ராவுஃப்பின் ரன் அப் நன்றாகவே இல்லை, சரளமான ரன் அப் இல்லை அது. கடந்த 4-5 ஆண்டுகளில் அவர் ஏன் இன்னும் தன் ரன் -அப்பை சரி செய்யவில்லை என்று நான் வக்கார் யூனிஸிடம் கேட்டேன். வக்கார் யூனிஸும் இதே காரணத்தைத்தான் சொன்னார், அதாவது ராவுஃப் ரெட் பால் கிரிக்கெட் ஆடுவதில்லை என்று.
வாழ்த்துக்கள் இந்தியா 7க்கு 7 வெற்றி. இந்திய அணிதான் தகுதியான சாம்பியன்கள். இங்கு பெரிதாக வென்று விட்டனர். “ என்றார் வாசிம் அக்ரம்.