தாம்பரம் மாநகராட்சி, சேலையூர் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த, 15 ஆண்டுகளாக திமுக கவுன்சிலர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்து வருகிறார். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, சேலையூர் கிராமம், 45-வது வார்டில் உள்ள ஏழுமலை தெரு – பள்ளிக்கூட தெரு இணைப்பு சாலையை, சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர்.
இந்த தெருவில் அங்கன்வாடி மற்றும், கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மொத்தம் 22 அடி அகலமுள்ள சாலை, ஆக்கிரமிப்பின் காரணமாக, 3 அடியாக குறுகிவிட்டது. குழந்தைகளை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், செல்லப் பிராணிகள், ஆடு, மாடுகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொதுமக்களுக்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு இடத்தில், தாம்பரம் மாநகராட்சி வரைபடத்தின்படி சாலை என்று தான் தகவல் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அவ்விடத்தில் சாலை அமைத்து தரக்கோரியும், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த பல ஆண்டுகளாக முதல்வர் முதல், எம்எல்ஏ, எம்.பி., அமைச்சர், மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் என, அனைத்து தரப்பினரிடமும் அந்த வார்டு கவுன்சிலர் தாமோதரன் மற்றும், அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஆனால் இதுநாள்வரை எந்த ஒருநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிவாழ் மக்களும் பயன்பெறுவர். ஆளுங்கட்சி கவுன்சிலர் பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றால், ஆக்கிரமிப்பாளர்களின் அரசியல் செல்வாக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு குடியிருப்பவர்களுக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் இருந்து இடமாற்றம் செய்யப்படும் பயனாளிகளுக்கு வழங்குவது போல மாற்று இடத்தில் இடம் வழங்கி, சாலையை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பலதரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கவுன்சிலர் தாமோதரன் கூறியது: மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த, 15 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை மனு அளித்து விட்டேன். ஆனால் தீர்வுதான் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேரத்தில் அரசியல் அழுத்தம் காரணமாக அகற்றுவதை அதிகாரிகள் நிறுத்தி விடுகின்றனர். எனவே, சட்டவிரோதமாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள இணைப்பு சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு சாலை அமைக்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்: தாம்பரம் மாநகராட்சி எல்லையில் சிறிய சாலைகள் முதல், பெரிய சாலைகள் வரை வியாபாரிகளும், பொதுமக்களும் தங்கள் இஷ்டத்துக்கு சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை வரைமுறைப்படுத்த வேண்டிய தாம்பரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு, ஆக்கிரமிப்பு பிரச்சினைகளை கண்டு கொள்வதே இல்லை. மாறாக அவர்கள் புதிய குடியிருப்புகளுக்கு அனுமதி கொடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.