புதுடெல்லி: “கோயில்கள் முன்பாக இந்து அல்லாதோர் பிரசாதப் பொருட்கள் விற்றால் அவர்களை உதைக்கலாம்” என முன்னாள் பாஜக எம்.பி.யும், பெண் துறவியுமான பிரக்யா தாக்கூர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ம.பி.யின் தலைநகரான போபாலின் முன்னாள் பாஜக எம்.பி.யாக இருந்தவர் துறவி பிரக்யா சிங் தாக்கூர். இவர், நேற்று முன்தினம் போபாலின் ஒரு நவராத்ரி விழாவில் கலந்துகொண்டு பேசினார். இது, பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்டது. இதில் முக்கிய விருந்தினரான பெண் துறவி பிரக்யா, முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்து அல்லாதவர்கள் கோயில்களின் முன்பாக பிரசாதங்களை விற்றால் அவர்களை தாக்கலாம் என்றும், மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார். போபாலின் சோலா பகுதியில் நடந்த துர்கா வாஹினி பகுதி நவராத்ரி பெண்கள் விழாவில் முன்னாள் எம்பி பிரக்யா தாக்கூர் பேசியதாவது: பிற எந்த மதத்தைச் சேர்ந்தவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.
அவர்கள் விளக்குகள், பிளம்பிங் சாதனங்கள் அல்லது துப்புரவுப் பணியாளர்கள் என எந்த பணிக்காக வந்தாலும் சரி. பிறமதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாடம் கற்பிக்க வீட்டிலேயே ஆயுதங்களை வைத்திருங்கள்.நவராத்திரியின் போது, நாம் வாழும் பகுதியின் கோயில்களைச் சுற்றி யார் பிரசாதம் விற்கிறார்கள் என்பதைக் கண்டறிய கோயில்களில் பல குழுக்களை உருவாக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்கள் பிரசாதம் விற்பனை செய்வதைக் கண்டால், முடிந்தவரை அவர்களை அடித்து நொறுக்குங்கள்.
இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து பிரசாதம் வாங்க மாட்டோம். அதை விற்க விடமாட்டோம், கோவிலுக்குள் நுழையவும் அனுமதிக்க மாட்டோம் என உறுதி கொள்ளுங்கள். எனத் தெரிவித்தார்.தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் துறவி பிரக்யா பேசுகையில், ‘கொடி இல்லாமல், கேடயம் இல்லாமல் சுதந்திரம் அடையப்பட்டது என இவர்கள் கூறினர்.
அவர்கள் அதிகாரத்திற்கு மட்டுமே பேராசை கொண்டவர்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறாமல் நாட்டின் இதயங்களை வெல்லாதவர் முதல் பிரதமரானார். அவர் எந்த வகையிலும் நாட்டிற்கு சேவை செய்யவில்லை.அவர் ஆங்கிலேயர்களைப் புகழ்ந்து பேசுவார். அவர் ஆங்கிலேயர்களுக்கு முன்பாக வணங்குவார். குணத்திலும், நடத்தையிலும் நல்லவர் அல்ல.தலைமைத்துவம் அவருக்கு இல்லை. அத்தகையவர்களை பிரதமராக்கி நம் நாட்டின் முதுகில் குத்தினார்.’ எனக் கூறினார்.
இதுபோல், சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் பிரபலமானவர் பிரக்யா தாக்கூர். இவர், கடந்த 2008-ல் மகராஷ்டிராவின் மாலேகான் வெடிகுண்டு வழக்கிலும் சிக்கி சிறைப்பட்டிருந்தார். பல வருடங்கள் நடைபெற்ற இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த ஜுலை 31-ல் வெளியானது. இதில், துறவி பிரக்யா உள்ளிட்ட அனைவரும் ஆதாரங்கள் இல்லை என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது நினவுகூரத்தக்கது.