சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காணச் சகிக்க முடியாத அளவுக்கு விளையாட்டில் அரசியல் கலந்திருந்தது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் 1983 உலகக் கோப்பை நாயகர் சையத் கிர்மானி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இரு அணி வீரர்களுமே முரட்டுத்தனமாகவும் திமிரெடுத்தும் நடந்து கொண்டனர் என்று சையத் கிர்மானி சாடியுள்ளார். அதாவது தற்கால கிரிக்கெட் ஆடப்படும் விதம் தனக்கு மிகவும் மனச்சோர்வையும் கவலையையும் அளிப்பதாக இருக்கிறது என்கிறார் சையத் கிர்மானி.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “நாடுகளின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை இப்போது கிரிக்கெட் விளையாடப்படுகிற விதம் பெரும்பாலும், ஜெண்டில்மேன்கள் ஆட்டம் போல் தெரியவில்லை. மைதானத்தில் மிகவும் நாகரிகமற்ற திமிர் பிடித்த நடத்தை பெருகியுள்ளது… பல இடங்களிலிருந்தும் எனக்கு செய்திகள் வருகின்றன… இந்திய அணி என்ன செய்தது? என்ன அரசியல் நடக்கிறது மைதானத்தில்? இந்த கருத்துகளை கேட்டாலே எனக்கு வெட்கமாக உள்ளது.
இன்றைய காலக் கட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு என்ன ஆகிவிட்டது? ஆசியக் கோப்பையில் நடந்தது அருவருப்பானது… இது என் மெஸேஜ்களில் வந்த வார்த்தைகள்… இன்றைய விளையாட்டின் நிலை என்னவாக மாறியுள்ளது என்பதைப் பார்த்தால் மனவேதனைதான் எஞ்சுகிறது. குறிப்பாக கிரிக்கெட்டில்… இது சரியானதல்ல. அரசியல் என்பது விளையாட்டில் புகக்கூடாத ஒன்று… அரசியலை விட்டு வெளியே வாருங்கள்.
விளையாட்டு மைதானத்திற்குப் வெளியே நடந்தது எதுவாக இருந்தாலும், அதை அங்கேயே விட்டு விடுங்கள். அதனை உங்கள் வெற்றியிலோ அல்லது இந்த ஆட்டத்திலிருந்து நீங்கள் என்ன பெற்றீர்களோ அதனுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள். இதுவொரு உயர்ந்த விளையாட்டு. அதை அரசியலுடன் தொடர்புபடுத்தாதீர்கள்… உயர்ந்த நோக்கங்களுக்காக அர்ப்பணிக்க விரும்பினால் அது நல்லதுதான் ஆனால் அதையும் அரசியலுடன் இணைக்க வேண்டாம்…
எங்களுடைய காலத்தில் கிரிக்கெட்டில் எத்தனை அற்புதமான நட்பு இருந்தது. பாகிஸ்தானிய வீரர்கள் இந்தியாவுக்கு வருவார்கள், நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்வோம். என்ன உபசாரம், என்ன அன்பு, என்ன பாசம்… இன்றைய நிலையைப் பார்த்தால், ஒரு கிரிக்கெட் வீரராக நான் என் தலைகுனிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று சையத் கிர்மானி வேதனை தெரிவித்துள்ளார்.