வரும் பொங்கல் பண்டிகைக்கான வெளியீட்டில் விஜய்யின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ இருந்த நிலையில், தற்போது பான் இந்தியா படமான ‘த ராஜா சாப்’ படமும் இணைந்திருக்கிறது. இதன் மூலம் பொங்கல் ரேஸ் சூடு பிடித்திருக்கிறது.
பண்டிகை தினங்கள் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகிறதென்றால் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம் உறுதி. அதிலும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். புத்தாடை அணிந்து, அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி ரசிகர்களின் ஆரவாரத்துடன் முதல்நாள் முதல் காட்சி பார்க்கும் அனுபவம் அலாதியானது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இத்தகைய கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது என்று அடித்துக் கூறலாம். காரணம் விஜய், சிவகார்த்திகேயன், பிரபாஸ் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள். இவற்றில் எந்தப் படம் பொங்கல் வின்னராக இருக்கும் என்பதே ரசிகர்களின் மற்றொரு மில்லியன் டாலர் எதிர்பார்ப்பு.
ஜனநாயகன்: அடுத்த ஆண்டு மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் முதன்மையானதாக இப்படத்தை சொல்லலாம். காரணம் விஜய் இதனை தனது கடைசிப் படமாக ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். அவர் தற்போது முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதாலும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதாலும் இயல்பாகவே இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி விட்டது.
இப்படம் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டாலும் இதனை ஹெச்.வினோத் எப்படி தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கிறார் என்ற ஆவலும் எழாமல் இல்லை. ஒரே ஒரு க்ளிம்ப்ஸ் தவிர படம் குறித்த எந்த தகவலையும் வெளியாகவிடாமல் படக்குழு தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறது. பொங்கல் வெளியீட்டில் இப்படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனினும் ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் அடுத்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக இப்படம் மாறும்.
பராசக்தி: ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பெரும் நடிகர் பட்டாளம் நடிக்கிறது. படத்தின் டைட்டில், அறிவிப்பு டீசர், நடிகர்கள் தேர்வு என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. தொடர்ந்து ‘அமரன்’, ‘மதராஸி’ என தொடர்ந்து ஹிட் கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இதுவும் ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.
ரவிமோகன் முதல் முறையாக இதில் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தித் திணிப்புக்கு எதிரான கதைக்களம் என அரசல் புரசலாக பேசப்பட்டாலும், பழைய ‘பராசக்தி’யைப் போன்ற நேர்த்தியான திரைக்கதையும், அனல் பறக்கும் வசனங்களும் இருந்தாலும் இதுவும் தமிழில் இன்னொரு ‘கல்ட் கிளாசிக்’ ஆக மாறும் வாய்ப்பு உண்டு.
த ராஜா சாப்: ராஜமவுலியின் ‘பாகுபலி’ இரண்டு பாகங்களும் பிரபாஸின் மார்கெட்டை இந்தியா முழுவதும் தாறுமாறாக ஏற்றிவிட்டன. அந்த மார்கெட் மதிப்பை தக்கவைக்க அவரும் தொடர்ந்து பான் இந்தியா கதைகளாக நடித்து வந்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியடையவில்லை. பிரசாந்த் நீலின் ‘சலார்’ மட்டுமே குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றாலும் ‘பாகுபலி’யின் ரெக்கார்டை அப்படத்தால் உடைக்க முடியவில்லை. ’கல்கி’ நல்ல வசூல் செய்தாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இந்த சூழலில் தொடர்ந்து சீரியஸ் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த பிரபாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் களத்தில் இறங்கி இருக்கிறார். ட்ரெய்லரிலேயே அவருடைய கதாபாத்திரம் எப்படியானது என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால் பேய்ப் பட சீசன் ஓய்ந்து போன ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு ரிஸ்க்கை பிரபாஸ் எடுத்திருப்பது ஓவர் கான்ஃபிடன்ஸா என்று தெரியவில்லை. காரணம் கடைசியாக இந்த ஜானரில் வெளியான காமெடி ஹாரர் வகைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை பெறவில்லை.
இந்தியில் வெளியான ‘ஸ்த்ரீ 2’ விதிவிலக்கு. காரணம், போதுமான அளவுக்கு அந்த ஜானரை தென்னிந்திய இயக்குநர்கள் அடித்துத் துவைத்து காயப் போட்டு விட்டனர். ‘ராஜா சாப்’ ட்ரெய்லருமே கூட படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் அளவுக்கெல்லாம் இல்லை. எனினும் இதுபோன்ற கதைக்களங்களில் நான்கைந்து நல்ல காமெடிகளும், ஓரளவு சுவாரஸ்யமும் இருந்தாலே கூட ஃபேமிலி ஆடியன்ஸ் கைகொடுத்து காப்பாற்றி விடுவர்.
தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பொங்கலுக்கு மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் மிகப்பெரியது. அதிலும் கடைசிப் படம் என்பதால் இயல்பாகவே இந்த படத்துக்குதான் தமிழ் ரசிகர்கள் முன்னுரிமை கொடுக்க வாய்ப்பு அதிகம்.
ஆனால், தமிழகம் தாண்டி தெலுங்கு பேசும் மாநிலங்கள், இந்தியில் பிரபாஸின் மார்க்கெட் மிகப் பெரியது. ‘சலார்’ அளவுக்கு சுவாரஸ்யமாக இருந்தாலே கூட ’ராஜா சாப்’ படம் நல்ல வசூலை செய்துவிடும் வாய்ப்பு அதிகம். இந்த இரண்டு படங்களையும் தாண்டி வெற்றிபெற ஒரு அசத்தலான திரைக்கதையும், அழுத்தமான காட்சிகளும் ‘பராசக்தி’ படத்துக்கு தேவை. இந்த மூன்று படங்களும் ஒன்றாக மோதுவதால் 2026 பொங்கல் ரேஸ் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்திருக்கிறது.