சென்னை: தமிழகத்தின் 1,069 கி.மீ. நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சிறு துறைமுகங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை கடல்சார்வாரியம் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கடல்சார் வாரியத்தின் 97-வது வாரிய கூட்டம், அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய, சிறு துறைமுகங்கள் மூலம் வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிப்பெற வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகம் தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் அடிப்படையில் தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைக்க மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் 1,069 கி.மீ., நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சுற்றுப்புறச் சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பல்வேறு சிறு துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ், கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அதை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடிப் பாலம், பொது மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. இதுவரை பல லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
ராமேசுவரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க கருத்துருக்கள், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிதியுதவி கோரப்பட்டுள்ளது. இந்த 2024- 25 ம் ஆண்டில், தமிழ்நாடு கடல்சார் வாரியக் கட்டுப்பாட்டிலுள்ள சிறுதுறைமுகங்களில் 12 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், கடல்சார் வாரிய துணைத் தலைவர் டி.என்.வெங்கடேசன், நெடுஞ்சாலைத் துறை செயலர் இரா.செல்வராஜ், போக்குவரத்து துறை செயலர் சுஞ்சோங்கம் ஜடக்சிரு, பொதுப்பணித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, தொழில்துறை செயலர் வி.அருண்ராய், சிப்காட் மேலாண் இயக்குநர் கே.செந்தில்ராஜ், மீன்வளத் துறை செயலர் சுப்பையன், துறைமுக அலுவலர் கேப்டன் எம்.அன்பரசன் பங்கேற்றனர்.