கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தவெக பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால் அவர்கள் அதை கடைபிடித்து இருக்கவேண்டும். கடைபிடிக்க முடியாத கட்டுப்பாடுகள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாம்.
இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கும். கூட்டத்துக்கு அனுமதி தரும்போது ஆம்புலன்ஸ் செல்ல வழியிருக்கிறதா என பார்க்க வேண்டும். விஜய் பேசும்போது விளக்குகள் அணைந்தன, செருப்புகள் வீசப்பட்டன. ஆளில்லாத ஆம்புலன்ஸ்கள் வந்தன. இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல 40 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்து, திமுக மருத்துவர் அணி என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டபோது, அங்கு செல்லாத முதல்வர், இரவோடு இரவாக இங்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று(நேற்று) ஆணையத் தலைவர் விசாரணை நடத்தியபோது, அவரிடம் புகார் தெரிவித்தவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால், ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணை மேற்கொள்வதாக தெரியவில்லை. எனவே, சிபிஐ விசாரணை வேண்டும் என்றார்.