சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து.
இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் கண்காணிப்பு மற்றும் நிதி முன்னேற்றம், மின் உற்பத்தி, தடையில்லா மின் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, இதற்கு முன் நடந்த கூட்டங்களில் அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை மழைக்கு முன்பாக இருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், அது சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உயரதிகாரிகள் கண்காணித்து அறிக்கை மற்றும் புகைப்படங்கள் அனுப்பவும், வடகிழக்கு பருவமழை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் அனீஸ் சேகர், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், இணை மேலாண்மை இயக்குநர் விஷு மஹாஜன், அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமையக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.