சென்னை: தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்களுடன் காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் 11 பதிவு மண்டலங்களில் 56 பதிவு மாவட்டங்களின்கீழ், 587 பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் சூழலில், சில நேரங்களில் சர்வர் பிரச்சினையால் பதிவுப்பணிகள் முடங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை முதலே பொதுமக்கள் பதிவு ஆவணங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் டோக்கன் பெறும் போர்ட்டலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமை காலை முதலே, சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுப்பணிகள் முடங்கின. சர்வர் பிரச்சினையால் ஆவணங்களை பதிவு செய்ய முடியாமல், பதிவு அலுவலர்கள் திணறினர். இதனால், காலை முதல் வரிசையாக டோக்கன் அடிப்படையில் காத்தி ருந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் சர்வரை சரிசெய்யும் பணியில், அதனை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஓரளவு சீரான நிலையில், பதிவுப்பணிகள் தொடங்கின. வழக்கமாக சில நிமிடங்களில் முடிய வேண்டிய ஒரு பதிவுக்கான கால அவகாசம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆனது.
இதுகுறித்து, பதிவு அலுவலர்கள் கூறியதாவது: சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று காலை முதலே பதிவுக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அடுத்தடுத்து விடுமுறை வருவதால், வழக்கத்தைவிட அதிகமாக டோக்கன்கள் பெற்று, பதிவுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், சர்வர் பிரச்சினையால் அவர்களுக்கு உடனே பதிவு செய்து தர இயலவில்லை.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் அளித்தோம். அதன்பின், மாலையே நிலைமை ஓரளவு சீரடைந்தது. இருப்பினும், கணினி மிகவும் மெதுவாக இயங்கியதால், ஒரு பதிவுக்கே 15 நிமிடங்கள் வரை ஆனது. இதனால், பதிவுக்கு டோக்கன் பெற்ற பலரும் திரும்பிச் சென்றனர். அவசர பணியாக பதிவுக்கு வந்தவர்களுக்கு மட்டும் பதிவுப்பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வருவாய் அதிகளவில் ஈட்டப்படும் பதிவுத்துறையில் சர்வர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பதிவுத்துறையின் கணினி மென்பொருள் மற்றும் சர்வர் பராமரிப்பை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு, இனி இது போன்ற சிக்கல் ஏற்படாத வகையில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க, பதிவுத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.