சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரேநாளில் இருமுறை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ரூ.86,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம், செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதன் பிறகு, இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.85,120 ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.85,600 ஆக இருந்தது. இது மாலையில் மேலும் உயர்ந்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.86,160 ஆக இருந்தது.
ஒட்டு மொத்தமாக, நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160 என்ற புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.130 உயர்ந்து, ரூ.10,770-க்கு விற்கப்பட்டது.இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1.60 லட்சமாகவும் இருந்தது.