திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் மலையப்பர், கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த வாகன சேவையில், 20 மாநிலங்களுக்கும் மேலான நடனக் கலைஞர்கள் பங்கேற்று மாட வீதிகளில் நடனமாடினர். ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வாரி சேவகர்கள், அர்ச்சகர்கள், திரளான பொதுமக்கள் ஹனுமன் வாகன சேவையில் பங்கேற்றனர்.
தங்க ரதத்தில் உற்சவர்கள் பவனி: ஹனுமன் வாகனத்தை தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க ரதத்தில் எழுந்தருளினார். இந்த ரதத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் வரை நீடிந்த இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் உற்சவரை வழிபட்டனர்.
கஜ வாகன சேவை: பிரம்மோற்சவத்தின் 6-ம்நாளான நேற்றிரவு கஜ (யானை) வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு வாகன சேவை 7 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுசுவாமிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திரபிரபையிலும் மலையப்பர் பவனிவந்து அருள் பாலிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.திருப்பதி பிரம்மோற்சவத்தில் நேற்று மாலை தங்க தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் உருவாக்கப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.