சிவகாசி: “கரூருக்கு நேரில் சென்ற முதல்வர், துணை முதல்வர் அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஏன் நேரில் செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ நடைபயணத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். சிவகாசி சிவன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி, பாவடி தோப்பு திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது: “விளம்பரத்துக்காகவோ, ஓட்டுக் கேட்டோ நான் இங்கு வரவில்லை. திமுக அடுத்த தேர்தலை சிந்திக்கிறது. நான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறேன். பட்டாசு தொழிலாளர்களின் நிலையை நேரில் பார்த்தபோது மனவேதனை ஏற்பட்டது. நமது கலாச்சாரத்துடன் கலந்தது பட்டாசு. பசுமை பட்டாசுதான் தயாரிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்து உள்ளார். பசுமை பட்டாசு என ஒன்று இல்லை. பட்டாசு பிரச்சினையை மத்திய, மாநில அரசு கையில் எடுத்து உரிய தீர்வு காண வேண்டும்.
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறந்து 3 தலைமுறைகளை அழித்தார். ஸ்டாலின் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அழிக்கத் துடிக்கிறார். ஸ்டாலின் ஆட்சியில் அதை விட ஒரு படி மேலே சென்று கஞ்சா, ஹெராயின், போதை ஊசி, மாத்திரை என போதை கலாச்சாரம் ஓங்கி உள்ளது. 4 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 நாட்களில் தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை முழுமையாக ஒழிப்பேன்.
ரூ.500 கொடுத்து வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்தவன், தற்போது கொள்ளையடித்த பணத்தில் ரூ.1000 கொடுப்பான். உங்கள் சந்ததியின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க கூடாது. இந்த தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
50 ஆண்டு கால கோரிக்கையான காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.14,500 கோடி தேவை உள்ள நிலையில் ரூ.300 கோடி நிதி ஒதுக்குகிறது திமுக அரசு. திருச்சுழி தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏவாக உள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சொந்த தொகுதியின் வளர்ச்சி திட்டத்துக்கு நிதி ஒதுக்க மறுப்பது துரோகம். இந்தத் திட்டம் நிறைவேறினால் 1.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
காமராஜர் இல்லையென்றால் தமிழகம் பிஹார், சத்தீஸ்கர் போன்று பின் தங்கிய மாநிலமாக இருந்திருக்கும். ஏராளமான தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், 13 அணைகள், 25 ஆயிரம் பள்ளிகளை திறந்தவர் காமராஜர். ஆனால் திமுக ஆட்சியில் காமராஜர் திறந்த பள்ளிக்கூடங்கள் முடப்படுவது துரோகம். கடந்த மாதம் 204 பள்ளிகளை மூடி உள்ளனர். பள்ளிகள் தான் நமது அஸ்திவாரம். இத்தனை பள்ளிகள் இருப்பதால்தான் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது.
505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது. அனைத்து சமூகமும் முன்னேற வேண்டும் என நினைப்பதுதான் சமூக நீதி. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் மீது திமுக பழி போடுகிறது. உங்களுக்கு சாதி என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்றால், சமூக நீதிக் கணக்கெடுப்பு என மாற்றிக் கொள்ளுங்கள். சமூக நீதி குறித்த அடிப்படை புரிதல் இல்லாதவர் ஸ்டாலின்.
கரூருக்கு நேரில் சென்ற முதல்வர், துணை முதல்வர் அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஏன் நேரில் செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்.
இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் இளைஞர்கள் எழுச்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கே நடந்த வன்முறை நமக்கு வேண்டாம். நாம் அமைதியான முறையில் புரட்சி செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம். திமுக அரசை ஆட்சியில் விட்டு ஆட்சியை விட்டு அகற்றுவோம்” என்று அன்புமணி பேசினார்.