சென்னை: “ஓபிஎஸ் தலைமையில் புதிய அமைச்சரவையில் கண்ணீரோடு பதவியேற்ற உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்” என கரூர் துயரத்திற்கு முதல்வர் வெளியிட்ட வீடியோவை பார்த்து விட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. நாம் முதல்வராக இருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்துத் தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதல்வர் நேரில் போகிறாரே என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.
கரூர் சம்பவத்துக்கு ஆணையத்தை அரசு அமைத்ததை “கண் துடைப்பு” ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பழனிசாமியின் கண் மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமி தான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட கண் துடைப்புதானா?
சமூக ஊடகங்களில் எந்த மாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் இறந்தபோதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே.நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள்.
பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழுதியவர்கள் தானே நீங்கள். இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோ ஷூட்டாகத் தெரியும். பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.
அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29-ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலினின் வீடியோ பதிவை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே – அதுவா?” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.