சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயரத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோதான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது’ என முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டுக்கு வாய்த்திருக்கும் முதல்வர், எப்படிப்பட்ட பொம்மை முதல்வர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி. நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதேசமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே. என்ன அவதூறு பரவியது?. உங்கள் கட்சிக்காரர்கள், ‘தமிழ்நாடு மாணவர் சங்கம்’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே – அந்த அவதூறா? உங்கள் அரசின் காவல் துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது – இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா? அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு ஒக்கேஷன் பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?. சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே?
எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் கண் துடைப்பு ஆணையம் என்பதைக் காட்டுகிறது.
மக்களுக்கு திமுக அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்துக்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஸ்டாலின் அவர்களே, மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன? – கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எந்தக் கட்சியை சார்ந்தோராக இருந்தாலும், என்னை பொறுத்தவரை அவர்கள் நம் தமிழ் உறவுகள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டுமென விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. எனவே, நீதியரசர் ஆணைய அறிக்கை கிடைத்த பின்னர், அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படுமென உறுதியளிக்கிறேன். அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.