நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் வாகனத்தை சுற்றி 5 எண்ணிக்கைக்கு அதிகமாக வாகனங்கள் வரக்கூடாது. காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது உள்பட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
எனினும், காவல் துறையினர் நிபந்தனைகள் எதுவும் அன்று பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. தவிர, மதியம் 2.45 மணியளவில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் பங்கேற்றார். காலதாமதமாக விஜய் பங்கேற்ற காரணத்தினால் அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்களால் அசாதரண சூழல் ஏற்பட்டதாக நாமக்கல் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சாந்தகுமார் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தவெக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் என்.சதீஷ்குமார், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் மீது உண்மைக்கு புறம்பான தகவல் தந்தது, அச்சுறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து கூட்டத்தை கூட்டுவது என்பன உள்பட 5 பிரிவுகளின் கீழ் நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழக மாணவர் சங்கம் என்ற பெயரில் நாமக்கல் மாநகரம் முழுவதும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இச்சம்பவத்தால் நாமக்கல் மாநகரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.