புதுடெல்லி: இந்தியா – பூடான் இடையே ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், இத்திட்டம் ரூ.4,033 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
அசாமின் கோக்ரஜார் – பூடானின் கெலெபு இடையே ஒரு ரயில்வே லைன், மேற்கு வங்கத்தின் பனார்ஹெட் – பூடானின் சம்ட்சே இடையே ஒரு ரயில்வே லைன் என இரண்டு ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்விரு வழித்தடங்களில் ரூ. 4,033 கோடி செலவில் ரயில் பாதைகள் அமைக்கப்படும் என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்ததிட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்கு சென்றபோது கையெழுத்தானது” என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்தியா பூடானின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி. பூடானின் பெரும்பாலான வர்த்தகம், இந்திய துறைமுகங்களின் வழியேதான் நடக்கிறது. பூடான் பொருளாதாரம் வளரவும், பூடான் மக்கள் உலகளாவிய வலையமைப்பை சிறப்பாக அணுகவும் தடையற்ற ரயில் இணைப்பைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது.
89 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த ரயில் இணைப்புகள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் கொண்ட இந்திய ரயில்வேயின் வலையமைப்பை பூடான் அணுக உதவும். கோக்ரஜார் – கெலெபு ரயில் பாதை அடுத்த 4 ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். பனார்ஹெட் – சம்ட்சே ரயில் பாதை, அடுத்த 3 ஆண்டுகளில் அமைக்கப்படும்.
கோக்ரஜார் – கெலெபு ரயில் பாதையில் 29 பெரிய பாலங்கள், 65 சிறிய பாலங்கள், இரண்டு ஷெட்கள், ஒரு மேம்பாலம், 39 சுரங்கப்பாதைகள் அமைய உள்ளன. பனார்ஹெட் – சம்ட்சே ரயில் பாதையின் இடையே இரண்டு நிலையங்கள், ஒரு பெரிய மேம்பாலம், 24 சிறிய மேம்பாலம், 37 சுரங்கப்பாதைகள் ஆகியவை அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.