மதுரை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்துவிட்டது.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றத்திற்கு தற்போது தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தவெக மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற பதிவுத்துறை, மனு தாக்கல் செய்தால் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறும் அக்.3-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.
கரூர் சம்பவம் காரணமாக தவெக-வுக்கு தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த செல்வக்குமார், கே.கே. ரமேஷ் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அறிவழகன் கூறியதாவது: ”கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. விஜய் பிரச்சாரத்தின் போது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர கதியில் உடற்கூராய்வு செய்துள்ளனர். இதற்கு என்ன அவசியம் வந்தது?
போலீஸார் விதித்த நிபந்தனைகளை தவெக-வினர் மீறவில்லை. அனைத்து இடங்களிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பிரச்சாரம் நடைபெறுவதற்கு முன்பே ஏதோ பெரிய சம்பவம் நடைபெறுவதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளோம்.” என்று வழக்கறிஞர் அறிவழகன் கூறினார்.