‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’. இதன் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இவர் தற்போது ஜே.கே ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இது தொடர்பாக தரணி ராசேந்திரன், “சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகுமார் தேர்வு குறித்து, “சசிகுமார் சார் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு தன் நடிப்பால் கதாபாத்திரத்தையும் படத்தையும் மெருகேற்றியுள்ளார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பின்பு அவர் இந்தப் படத்தின் கதையை கேட்டு உடனே ஒத்துக்கொண்டது எங்களுக்கு ஆச்சரியமான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. இதில் சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.