புதுடெல்லி: வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக சிறப்பாக செயல்பட்டது. இம்முறை இன்னும் சிறப்பான வெற்றியைப் பெற நீங்கள் (தொண்டர்கள்) பாடுபட வேண்டும். அப்போதுதான், 160+ என்ற இலக்கை அடைய முடியும்.” என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், “மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். புனித பிஹாரில் இருந்து ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.
அமித் ஷாவின் பேச்சை விமர்சித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கல்வித்துறையில் VC என்றால், Vice Chancellor, ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் VC என்றால், Venture Capital, ராணுவத்தில் VC என்றால் Vir Chakra. ஆனால், தற்போது நமது அரசியலை வரையறுக்கும் புதிய வகை VC ஒன்று உள்ளது. அதுதான் Vote Chori (வாக்குத் திருட்டு).
பிஹாரில் இலக்கு என்ன என்பதை சூத்தரதாரி ஏற்கனவே வெளியிட்டுவிட்டார். மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் நம்பிக்கையுடன் அறிவித்துள்ளார். வாக்குத் திருட்டு இத்தகைய வெற்றியைக் கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
அரசியல் ரீதியாக விழிப்புணர்வு மிக்க பிஹார் மக்கள், இந்த சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பார்கள். பிஹாரில் மகாகட்பந்தன் அதைச் செய்யும். அதோடு, முதலில் நிலநடுக்கம் உணரப்படும் இடம் புதுடெல்லியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், “பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் பிஹாருக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.