பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி பெற மறுத்துள்ளது.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை தாண்டி 150 ரன்கள் அடித்து வெற்றியை சாத்தியமாக்கியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது. நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், பாகிஸ்தான் அமைச்சராகவும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
போட்டி முடிந்ததும் மேடைக்கு வந்த நக்வியிடமிருந்து கோப்பையை பெற்றுக் கொள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் நக்வி மேடையில் 20 நிமிடம் காத்திருந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் வராததால் கோப்பையையும், பதக்கங்களையும் அவரே எடுத்துச் சென்றுவிட்டார்.
பின்னர் மேடைக்கு வந்த இந்திய அணி வீரர்கள் கோப்பையை பெறாமலயே கொண்டாடினர். இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, “நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை பெற வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் அதற்காக அவரே கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துச் செல்ல முடியும் என்று அர்த்தமல்ல. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவை விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “ஒரு அணியாக நாங்கள் (மொஹ்சின் நக்வியிடமிருந்து) கோப்பையை பெற வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்களை யாரும் அப்படிச் செய்யுமாறு சொல்லவில்லை. ஆனால், போட்டியை வெல்லும் அணி கோப்பைக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் காலித் அல் ஜரூனியிடமிருந்து கோப்பையைப் பெறத் தயாராக இருப்பதாக இந்திய அணி அதிகாரிகளிடம் தெரிவித்தது. இருப்பினும், நக்வி இதற்கு அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.