புதுடெல்லி: டெல்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருப்பவர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி. இவர் மீது 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர். போலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில் நேற்று அவர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சுவாமி சைதன்யானந்தா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு மாணவிகள் சிலர் டெல்லி வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து அதே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.