துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு சாகிப்ஸாதா ஃபர்ஹான், பஹர் ஸமான் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. மட்டையை சுழற்றிய சாகிப்ஸதா ஃபர்ஹான் 35 பந்துகளில் தனது 5-வது அரை சதத்தை விளாசினார். பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி பந்துகளில் சாகிப்ஸதா ஃபர்ஹான் சிக்ஸர் விளாசினார். 9.3 ஓவர்களில் 84 ரன்கள் குவித்து மிரட்டிய இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார்.
இது திருப்பு முனையாக அமைந்தது. சாகிப்ஸதா ஃபர்ஹான் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது டீப் மிட் விக்கெட் திசையில் திலக் வர்மாவிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து சைம் அயூப் களமிறங்க பாகிஸ்தான் அணி 11.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
இதன் பின்னர் குல்தீப் யாதவ், அக்சர் படேல் கூட்டணி மாயா ஜாலங்கள் நிகழ்த்தி ஆட்டத்தை இந்திய அணி பக்கம் இழுத்தனர். சைம் அயூப் 14 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தை பேக்வேர்டு பாயின்ட் திசையில் அடித்த போது பும்ராவிடம் கேட்ச் ஆனது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ஹாரிஸ் ரன் ஏதும் எடுக்காமல் அக்சர் படேல் பந்தில் லாங் ஆஃப் திசையில் ரிங்கு சிங்கிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.
நிதானமாக பேட் செய்து வந்த பஹர் ஸமான் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹூசைன் தலாத் 1, கேப்டன் சல்மான் அலி ஆகா 8, ஷாகின் ஷா அப்ரிடி 0, பஹீம் அஷ்ரப் 0, ஹாரிஷ் ரவூஃப் 6, முகமது நவாஷ் 6 ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணி ஒரு கட்டத்தில் 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் மேற்கொண்டு 33 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களையும் கொத்தாக தாரைவார்தது 5 பந்துகளை மீதம் வைத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
147 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அபிஷேக் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் பஹீம் அஷ்ரப் பந்தை விளாச முயன்ற போது மட்டையில் சரியாக சிக்காமல் மிட் ஆன் திசையில் ஹாரிஷ் ரஃவூபிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில் 12 ரன்கள் எடுத்த நிலையில் பஹீம் அஷ்ரப் பந்தை மிட் ஆஃப் திசையில் விளாச முயன்ற போது ஹாரிஸ் ரவூஃபின் சிறப்பான கேட்ச் காரணமாக வெளியேறினார். 20 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி நிதானமாக விளையாடியது. 3-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி பிரிந்தது.
சஞ்சு சாம்சன் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிவம் துபே களமிறங்க திலக் வர்மா அதிரடியாக விளையாடினார். பஹீம் அஷ்ரப், அப்ரார் அகமது, ஹாரிஷ் ரவூஃப் ஆகியோரது பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்ட திலக் வர்மா 41 பந்துகளில் அரை சதம் கடந்தார். இது அவருக்கு 4-வது அரை சதமாக அமைந்தது.
கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவையாக இருந்தது. ஷாகின் ஷா அப்ரிடி வீசிய 17-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. ஹாரிஸ் ரவூஃப் வீசிய அடுத்த ஓவரில் ஷிவம் துபே சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது.
19-வது ஓவரை பஹீம் அஷ்ரப் வீசினார். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் 4-வது பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் கடைசி பந்தை ஷிவம் துபே மிட் ஆஃன் திசையில் விளாசிய போது எல்லைக்கோட்டுக்கு அருகே ஷாகின் ஷா அப்ரிடியிடம் கேட்ச் ஆனது. ஷிவம் துபே 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சேர்த்தார்.
ஹாரிஸ் ரவூஃப் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் 2 ரன்கள் சேர்த்த திலக் வர்மா அடுத்த பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் இந்திய அணி வெற்றியை நெருங்கியது. அடுத்த பந்தில் திலக் வர்மா ஒரு ரன் சேர்த்தார். 4-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற் றது.
திலக் வர்மா 53 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 69 ரன்களும், ரிங்கு சிங் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 9-வது முறையாகும். இதற்கு முன்னர் 1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளிலும் இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது.