இந்திய லெக் ஸ்பின்னர் ராகுல் சஹார் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக தன் அறிமுகப் போட்டியிலேயே 51 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 1859-ம் ஆண்டிலிருந்து நேற்று வரை இருந்து வந்த சாதனையை உடைத்த பெருமையைப் பெற்றார் ராகுல் சஹார்.
ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ராகுல் சஹார் 24 ஓவர்கள் வீசி அதில் 7 மெய்டன்களுடன் 51 ரன்களூக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 1859-ம் ஆண்டில் சர்ரே அணிக்காக அதன் அறிமுக வீரர் வில்லியம் மியூடில் என்பவர் எடுத்த 7 விக்கெட்டுக்கு 61 ரன் சாதனையை முறியடித்தார்.
இதோடு ராகுல் சஹார் இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகளை 118 ரன்களுக்குக் கைப்பற்றியுள்ளார். இதனால் ஹாம்ப்ஷயர் அணியை சர்ரே அணி வெற்றி பெற்றது. ராகுல் சஹாரின் முதல் தர கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த பந்து வீச்சு இதுதான். அதே போல் இந்த 4 நாள் போட்டி வடிவத்தில் இதுதான் இதுவரையிலான ஆகச்சிறந்த பந்து வீச்சும் கூட.
இரண்டாவது இன்னிங்ஸில் ஹாம்ப்ஷயர் அணிக்கு வெற்றி இலக்கு 181 ரன்கள்தான். ஆனால், ராகுல் சஹாரின் அற்புதமான பவுலிங்கினால் ஹாம்ப்ஷயர் 160 ரன்களுக்குச் சுருண்டது. அதுவும் ஒரு கட்டத்தில் ஹாம்ப்ஷயர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 66 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது ராகுல் சஹாரின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்த 95 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துள்ளது.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்திய அணியின் ஸ்பின்னரும் தமிழ்நாட்டு வீரருமான வாஷிங்டன் சுந்தரை இரு இன்னிங்ஸ்களிலும் காலி செய்துள்ளார் ராகுல் சஹார். சுந்தரும் இந்த மேட்சில் 56 மற்றும் 11 ரன்களை எடுத்ததோடு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரை நாம் மீண்டும் பார்க்க முடியும். அதே வேளையில் ராகுல் சஹாரின் இந்திய அணி கரியர் 2019-2021-கு இடையே ஒரேயொரு ஒருநாள் சர்வதேசப் போட்டி மற்றும் 6 டி20 போட்டிகளுடன் முடிந்தது.
சர்ரே அணியின் வில் ஜாக்ஸ், கேம் ஸ்டீல் ஆகிய ஸ்பின்னர்கள் காயமடைந்ததால் சர்ரே நிர்வாகம் ராகுல் சஹாரை அழைத்தது. ராஜஸ்தான் அணிக்காக ரெகுலராக ரஞ்சியில் ஆடி வருபவர் ராகுல் சஹார்.