புதுடெல்லி: “லடாக்கில் ஏற்பட்ட வன்முறை, 4 பேர் உயிரிழப்புக்கு மத்தியில் ஆளும் பாஜக.வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம்’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேசமாக லடாக் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநில அந்தஸ்து வழங்க கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
கடந்த வாரம் அங்கு இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியதில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வாங்சுக் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று, வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்பின், வாங்சுக் நடத்தி வரும் என்ஜிஓ அமைப்புக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது, அவர் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை வாங்சுக்கை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது: லடாக்கில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்தியில் ஆளும் பாஜக.வுக்கும் அதன் கொள்கை வழிகாட்டியாக உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம். லடாக் மக்கள் தங்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தனர். ஆனால், 4 பேர் உயிரை பறித்து பதில் அளித்துள்ளது பாஜக. அத்துடன் வாங்சுக்கை சிறையில் அடைத்துள்ளது.
லடாக் மக்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்களுடைய கலாச்சாரம், பண்பாட்டின் மீது பாஜக.வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக் மக்களுக்கு உரிமைகளை கொடுக்க வேண்டும். அங்கு வன்முறையை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு மாநில அந்தஸ்து உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.