கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தனியார் நிறுவனம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் மொத்தம் 3 ஷிப்ட்களாக பெண்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் வந்து கொண்டே இருந்தனர். முதலில் வெறும் மயக்கம் என்று நினைத்தவர்களுக்கு, கொத்து கொத்தாக இறந்து விழுவதை பார்த்தபோது பதற்றம் பற்றிக்கொண்டது. இதனால் பதறிய தூய்மைப் பணியாளர்கள் சுற்றிச் சுழன்று பணியாற்றினர்.
தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக பதற்றம், பயம், பரபரப்புடன் செய்த வேலை காரணமாக தனம் என்ற பெண்மணி மயங்கி விழுந்தார். அதன்பின், மறுநாள் காலையும் கண்ணீர் சிந்தியபடியே பணிகளை தொடர்ந்தனர். தற்காலிக அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தில் பணியாற்றினாலும், மனமுவந்து பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை பொதுமக்கள் மனதார வாழ்த்தினர்.