திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் கருட வாகன சேவை நேற்று இரவு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் 4 மாட வீதிகளும் நிரம்பி விட்டன. அதாவது மாட வீதிகளில் மட்டுமே சுமார் 1.90 லட்சம் பக்தர்கள் கருட சேவையை காண இடம் பிடித்து விட்டனர். இவர்களைத் தவிர, மாட வீதிகளுக்குள் நுழைய மேலும் பல்லாயிரக்கணக்கானோர் போலீஸ் கெடுபிடிகளையும் மீறி உள்ளே செல்ல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இரவு கருட வாகன சேவை தொடங்கி 1 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல நேற்று பக்தர்கள் கூட்டம் திருப்பதி பேருந்து நிலையம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் போன்ற இடங்களில் அலைமோதியது. பைக்குகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கார், ஜீப்கள் மற்றும் பேருந்துகளில் மட்டுமே பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அலிபிரி மலைப்பாதை சோதனைத் சாவடியில் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.