Last Updated : 29 Sep, 2025 10:05 AM
Published : 29 Sep 2025 10:05 AM
Last Updated : 29 Sep 2025 10:05 AM

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள் என்றாலே கருட சேவைதான் நினைவுக்கு வரும். நாடு முழுவதிலும் இருந்து கருட சேவையை காண பக்தர்கள் நேற்று திருமலைக்கு படை எடுத்து வந்தனர்.
புரட்டாசி மாதம் என்பதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை நடந்த மோகினி அலங்கார வாகன சேவையிலேயே பக்தர்கள் மாட வீதிகளில் குவிய தொடங்கி விட்டனர்.
எப்போதும் இல்லாத வகையில் அரை மணி நேரம் முன்னதாக நேற்று மாலை 6.15 மணிக்கு வாகன மண்டபத்தில் கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளினார். மூலவர் அணியும் 5 பேட்டை தங்க காசு மாலை, ஆண்டாள் அருளிய சிகாமணி மலர் மாலை, கிளிகள் அணிந்து கம்பீரமாக எழுந்தருளிய மலையப்பரை கண்டு, அங்கு கூடியிருந்த கூட்டம் கோவிந்தா..கோவிந்தா பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பியது.
கருட வாகனத்தின் முன் காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் செல்ல, ஜீயர் குழுவினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாடிய படி செல்ல, தமிழகம் உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடியபடி சென்று கருட சேவையை மேலும் சிறப்பித்தனர்.
நேற்று மாட வீதிகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கூடியிருந்தனர். மாட வீதிகளுக்கு வெளியே மேலும் 2 லட்சம் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்களும் படிப்படியாக மாட வீதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு கருட வாகன சேவையை கண்டு களித்தனர். மாலை 6.15 மணி முதல் இரவு 11.30 மணி வரை கருட வாகன சேவை நடந்தது. இதில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
FOLLOW US
தவறவிடாதீர்!