ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை சாம்பியனான இந்திய அணி வாங்க மறுத்தது, இதனையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் கால தாமதமானது.
இந்திய அணிக்குச் சேர வேண்டிய கோப்பையையும் பதக்கங்களையும் மோசின் நக்வி எடுத்துச் சென்றது கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. மோசின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் என்பதோடு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கூட.
இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும் பதக்கங்களையும் அவர் எடுத்துச் செல்ல முடியாது. விரைவில் அது இந்திய அணியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று நம்புகிறோம்.
வரும் நவம்பர் மாதம் துபாயில் ஐசிசி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் நாங்கள் பாகிஸ்தானின் மோசின் நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம்.” என்றார்.
ஆட்டம் முடியும் போது துபாய் நேரம் இரவு 10:30. பரிசளிப்பு நிகழ்ச்சிக்காகக் காத்திருந்தவர்களுக்கு குழப்பம் அதிகரித்தது. தாமதத்திற்குக் காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பவில்லை என்று அரசல் புரசலாகத் தகவல்கள் கசிந்தன.
பரிசளிப்பு நிகழ்ச்சித் தொடங்கிய பிறகு குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மேடையில் இருந்த மற்ற விஐபிக்களிடமிருந்து பதக்கங்களைப் பெற்றனர். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, நக்வியிடமிருந்து ரன்னர்களுக்குரிய காசோலையைப் பெற்றார்.
அப்போது இந்திய அணிக்குக் கோப்பை என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்தது. உடனே பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி ஊடகத்தின் சைமன் டூல் , ‘இந்திய அணி தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் இன்று இரவு பெறப்போவதில்லை’ என்று அறிவித்ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்தது என்றார்.
ஆட்டம் முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் கிரிக்கெட் ஆடும் காலத்திலிருந்து இப்படி ஒன்று நடத்தையைப் பார்த்ததில்லை. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை. நாங்கள்தான் கோப்பையை பெற முழுத் தகுதி பெற்றவர்கள். இதை விட வேறு எதையும் என்னால் கூற முடியவில்லை.
டிராபி கொடுக்காவிட்டால் என்ன என் டிராபிக்கள் என்னுடன் ஓய்வறையில் இருக்கின்றனர். 14 வீரர்கள்தான் அவர்கள். பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள் இவக்ரள்தான் உண்மையான டிராபிக்கள். கோப்பையை அவரிடமிருந்து பெறக்கூடாது என்று முடிவெடுத்தோம், யாரும் இப்படிச் செய் என்று எங்களுக்கு அறிவுறுத்தவில்லை.
போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே இருந்தனர். பரிசளிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளும் அங்கு இல்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து பரிசளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பரிசளிப்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆசியக் கோப்பை அங்கிருந்து அகற்றப்பட்டது. ஒரு அதிகாரி கோப்பையை எடுத்துச் சென்று விட்டார், ஏன் என்றும் தெரிவிக்கவில்லை.
இந்திய வீரர்கள் பதக்கங்களைப் பெற்ற போது நக்வியை கண்டு கொள்ளவில்லை, அவரும் இந்திய வீரர்கள் பரிசுகளை வாங்க வரும்போது கரகோஷம் செய்யவில்லை. பாகிஸ்தான் வீரர்களுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு சூர்யகுமார் படை மேடையில் ஏறி கோப்பையைத் தூக்குவது போல் கற்பனைக் கோப்பையைத் தூக்கி மற்ற வீரர்களுடன் கொண்டாடினார்.
ஆட்டம் முடிந்தவுடன் இத்தனை நாடகம் நடைபெற்றது, அடுத்த சில நாட்களுக்கு இதுதான் பெரிய சர்ச்சையாக இருக்கப் போகிறது.