புதுடெல்லி: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர். அதன் விளைவு ஒன்றுதான். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது. அவர்கள் இருவரும் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சஞ்சு சாம்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஷிவம் துபேவுடன் இணைந்து 60 ரன்கள் சேர்த்தால் திலக் வர்மா. துபே 33 ரன்களில் வெளியேறினார். இந்திய அணிக்கான வெற்றி ரன்களை பவுண்டரி விளாசி ரிங்கு சிங் எடுத்துக் கொடுத்தார். திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை இந்தியா தாக்கியது. இதன் பின்னர் பாகிஸ்தான் தரப்பில் இந்திய எல்லையோர மாநிலங்கள் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானது.