புதுடெல்லி: டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, மனிதாபிமான உதவி, சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர்தொழில்நுட்ப துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்கள் இந்த சந்திப்பின்போது முன்னெடுக்கப்படும்.
இந்தியா தனது வர்த்தக உறவுகள் குறித்த முடிவுகளை சுயமாக மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளில் இந்தியா முற்றிலும் திறமையான வகையில் முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை அமெரிக்காவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை. ஏனெனில், இந்தியா எந்த அழுத்தத்துக்கும் அடிபணியாமல் தனது சொந்த விருப்பப்படி சர்வதேச கூட்டாளர்களை தேர்ந்தெடுக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான பிரேசில், இந்தியாவின் முயற்சியை ரஷ்யா ஆதரிக்கிறது. தற்போது மாறிவரும் உலகளாவிய நிலவரங்களுக்கு ஏற்ப ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு. இவ்வாறு லாவ்ரோவ் தெரிவித்தார்.