சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசுத் துறைகளில் குரூப் 2, 2ஏ பணிகளில் உள்ள 645 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியானது. முதல்நிலைத் தேர்வுக்கு 5 லட்சத்து 53,634 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 1,905 மையங்களில் நேற்று நடைபெற்றது.
இதில் 4 லட்சத்து 18,791 பேர் பங்கேற்றனர். 1 லட்சத்து 34,843 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த முறை முதல்நிலைத் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவும், பொது அறிவு மற்றும், பொது தமிழ் வினாக்கள் எதிர்பாரா பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். மேலும், வினாத்தாளில் மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் திட்டம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றன.
இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும். இதுதவிர குரூப் 4-ல் 4,662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான முடிவுகள் அக்டோபரில் வெளியாகும். மேலும் 2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் வருடாந்திர கால அட்டவணை டிசம்பருக்குள் வெளியாகும். ஓம்எம்ஆர் தாளில் பல முன்னேற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். அதில் உரிய பாதுகாப்பு முறைகள் உள்ளன. குரூப் 2, 2ஏ பதவிகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.