சென்னை: ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், 2021-ம் ஆண்டில் வழங்கியிருக்க வேண்டிய ரூ.2,500 விலையை நான்கரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் வழங்கியிருக்கிறார்.
உண்மையில் 2021-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் விலையைவிட திமுக வாக்குறுதி அளித்த கொள்முதல் விலை 32.42 சதவீதம் அதிகமாகும். அதே அளவீட்டை கொண்டு பார்த்தால் தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,311 வழங்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.811 குறைவாக கொடுத்து விட்டு, நெல்லுக்கு அதிக விலை கொடுத்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழக அரசால் தற்போது குவிண்டால் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2,369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 மட்டும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. ஒடிசா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திரம் மற்றும் தெலங்கானா ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்குகின்றன.
அதேநேரத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் 40 கிலோ மூட்டைக்கு ரூ.60 வீதம் லஞ்சம் வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர். விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். அதேபோல, தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 சதவீதத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் ஊழலை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.