சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடியாக சென்னை திரும்பினார். பிரச்சார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவது ஆகியவை தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறுவதற்காக விஜய் மீண்டும் கரூர் செல்ல அனுமதி கேட்டு, கட்சித் தரப்பில் காவல் துறையில் மனு கொடுக்கப்பட உள்ளதாகவும்கூறப்படுகிறது.
இதற்கிடையே, விஜய் வெளியிட்டஅறிக்கை: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.
கண்களும், மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. என் சொந்தங்களே, நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், இந்த பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடுசெய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பை தாங்கவே இயலாது. இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.20 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.2 லட்சமும் அளிக்க எண்ணுகிறேன். இழப்புக்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். ஆனாலும், இந்த நேரத்தில், எனது உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தை சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் தவெக உறுதியாக செய்யும். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.